அமைச்சர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட சிறு காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கில் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்பட்டு வரும் பொருட்களின் தரம் குறித்து தமிழக உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
எச்சரிக்கை
குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளிலுள்ள அரிசிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், நியாய விலைக் கடைகளுக்கு விநியோகிக்க லாரியில் எடுத்துச்செல்லப்படவுள்ள அரிசி மூட்டைகளையும் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அங்கிருந்த மாவட்ட உணவு வழங்கல் அலுவலரிடம், குடோனில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி தரமற்றதாக இருந்தால், முழு பொறுப்பு தங்களுடையது என்றும், உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
உடனடி நீக்கம்
தாமல் கிராம பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பேசியபோது, சாதாரணமாக பணம் எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அப்பொழுது விவசாயிகள் 50 ரூபாய் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு தருவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திரைப்பட பாணியில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய பணம் பெற்ற கொள்முதல் அலுவலர், உதவியாளர், காவலர், ஆகிய மூன்று பேரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திரைப்பட பாணியில் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் உத்திரவிட்டதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
குறைகளை கேட்ட அமைச்சர்
இதனையடுத்து கீழ் அம்பி பகுதியிலுள்ள நியாய விலைக் கடைக்கு சென்ற அமைச்சர் சக்கரபாணி பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களின் தரம் எடை குறித்து ஆய்வு மேற்கொண்டும்,அது குறித்து நியாயவிலைக் கடை பணியாளரிடமும் கேட்டறிந்தார்.மேலும் நியாயவிலைக் கடையில் ரேசன் பொருட்கள் வாங்க வந்த அரிசி குடும்பை அட்டைதாரர்களிடமும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது பெண்மணி ஒருவர் அமைச்சர் சக்கரபாணியிடம், தற்போது வழங்கப்பட்டுள்ள அரிசி மட்டுமே தரமாக உள்ளது என்றும், பலமுறை தரமற்ற அரிசியே வழங்கப்பட்டு வந்ததாக புகார் தெரிவித்த அவரிடம் இனி வருங்காலங்களில் தரமான அரிசி மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
செய்தியாளர் சந்திப்பு
அதன் பின் செய்தியாளர்களிடம் தமிழக உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ’’தமிழகத்தில் 6,926 நியாயவிலைக் கடைகள் வாடகைக்கு இயங்கி வருகிறது. அதற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் 11 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கி சாதனை படைத்துள்ளது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்த பணமும் கையூட்டு வாங்கக் கூடாது என்பதற்காக சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பி னும் விவசாயிகளிடம் கையூட்டு பெறப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.