ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு மாதம் முழுவதும் வேலிடிட்டி அளிக்கும் விதமாக புதிதாக ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. `காலண்டர் மாத வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளர்கள் இந்த வேலிடிட்டியை ஒரு மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும். ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்பட அனைத்து நிறுவனங்களும் தற்போது வழங்கி வரும் வழக்கமான 28 நாள்கள் வேலிடிட்டியைப் போல இல்லாமல், ஒரு மாதம் முழுவதும் வழங்கப்படும் இந்த வேலிடிட்டி அந்தந்த மாதங்களின் நாள் எண்ணிக்கையைப் பொருத்து 30 அல்லது 31 நாள்களுக்கு வேலிடிட்டி அளிக்கிறது.
259 ரூபாய் எனத் தற்போது கேலண்டர் மாத வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டம் நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அன்லிமிட்டெட் ஃபோன் கால்கள், டேட்டா முதலான சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன. 259 ரூபாய் மதிப்பிலான கேலண்டர் மாத வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம்...
இதுவரை தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள ப்ரீபெய்ட் பிளான்களிலேயே ஒரு மாதம் முழுவதுமான வேலிடிட்டி அளித்துள்ள ஒரே பிளான் இதுமட்டுமே. மேலும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மிகச் சரியாக ஒரு நாள்காட்டி மாதம் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் இந்தப் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் ஜியோ ப்ரீபெய்ட் எண்ணை இன்று மார்ச் 28 அன்று இந்த கேலண்டர் மாத வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 259 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அடுத்த மாதமான ஏப்ரல் 28 அன்று மீண்டும் ரீசார்ஜ் செய்யலாம். தொடர்ந்து இதனையே மே 28, ஜூன் 28 எனத் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யலாம்.
தற்போதைய 259 ரூபாய் மதிப்பிலான கேலண்டர் மாத வேலிடிட்டி ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது, அன்லிமிட்டெட் ஃபோன் கால் பேசும் வசதியுடன், நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வசதியும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி, ஜியோ செயலிகள், சேவைகள் முதலானவற்றிற்கான சப்ஸ்கிருப்ஷன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் தற்போது ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயன்படுத்துவோருக்கும், புதிதாக ரிலையன்ஸ் ஜியோ சிம் வாங்குபவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தை ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இரண்டு வழிமுறைகளிலும் செயல்படுத்தலாம். மேலும், முன்கூட்டியே பல மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்து, இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உண்டு. இதன்மூலம் உங்கள் தற்போதைய பிளான் முடிவடைந்தவுடன், இந்தப் புதிய பிளானில் வசதிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.