வரும் ஆகஸ்ட் 18 அன்று, ரியல்மீ ஸ்மார்ட்போன் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. Realme GT 5G, Realme GT Master Edition, Realme Book Slim ஆகியவை ரியல்மீ நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன. இவற்றும், Realme Book Slim இந்நிறுவனம் வெளியிடும் முதல் லேப்டாப் பிராண்டாக இருக்கப் போகிறது.
புதிய மாடல்களை வெளியிடுவதற்காக ரியல்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தளத்தில் இந்த நிகழ்விற்கென்று தனியாக பேஜ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதோடு, அதெற்கென்று தனியாக பிளிப்கார்ட் தளத்திலும் ஒரு பேஜ் உருவாக்கப்பட்டிருக்கிறது. Realme GT 5G மாடல் ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் கடந்த மார்ச் மாதத்திலும், சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், சீனாவில் Realme GT Master Edition மாடல் வெளியிடப்பட்டது. தற்போது இந்த மாடல்கள் இந்தியர்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படவுள்ளன.
ரியல்மீ நடத்தும் வெளியீட்டு நிகழ்வில் அந்நிறுவனத்தின் முதல் லேப்டாப் Realme Book Slim வெளியிடப்படும் எனவும் அதன் நிர்வாக இயக்குநர் மாதவ் சேத் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு ரியல்மீ நிறுவனத்தின் யூட்யூப் தளத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதே தினத்தில் Realme Book லேப்டாப் சீனாவில் வெளியிடப்படும் எனவும், இது இந்தியாவில் வெளியாகும் அதன் slim வகையில் இருந்து மாறுபடும் எனவும் ரியல்மீ நிறுவனத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Realme Book Slim லேப்டாப் ஏறத்தாழ 55 ஆயிரம் ரூபாய் விலைக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளிவந்த தகவல்களின்படி, இது 40 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆதலால், அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, விலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என்பது தெரியவருகிறது.
இந்த லேப்டாப் 14 இன்ச் அளவில் 2k டிஸ்ப்ளேவைக் கொண்டதாக இருக்கும் எனவும், இதில் 11th Generation Intel Core i5 processor பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் 16 GB RAM இடம்பெற்றிருக்கும் எனவும், Windows 10 இதன் ஆபரேட்டிங் சிஸ்டமாகச் செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 512GB SSD வசதியும், இதன் பேட்டரி சுமார் 54Wh திறனைக் கொண்டதாகவும் இது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Realme GT 5G மாடல் ஸ்மார்ட்போன் சுமார் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டதாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme GT Master மாடல் ஸ்மார்ட்போன்களுக்கும் இதே விலை நிர்ணியக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.