செல்போன்கள் ஸ்மார்ட்போன்  ஆன பின்னர் அதுவெறும் கைபேசியாக மட்டுமில்லை. கைக்கடிகாரம், மினி கணினி, கேமரா எனப் பலவாறு பரிணாமித்துவிட்டது. போதாதற்கு வங்கிக்குச் செல்லாமலேயே மொபைலிலேயே அனைத்துப் பரிவர்த்தனைகளை செல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.


தொழில்நுட்ப வளர்ச்சியில் கொலேட்டரல் டிசாஸ்டர் என்பதுபோல் பக்கவாட்டு விளைவுகளும் இருக்கவே செய்கின்றன. அப்படித்தான் சில மொபைல் செயலிகள் நமக்கு நீங்காத் துயரை ஏற்படுத்திவிடுகின்றன. இன்ஸ்டன்ட் லோன், 5 ஸ்டெப்பில் ஈஸி லோன் என்றெல்லாம் புற்றீசல் போல பல கடன் செயலிகள் இருக்கின்றன. தேசிய வங்கிகள் கூட கடன் செயலிகளை வைத்திருந்தாலும், இத்தகைய பெயர் தெரியாத நம்பகத்தன்மையற்ற செயலிகளை நம்பி இறங்கி சிக்கலில் மூழ்கிவிட வேண்டாம் என நிதித்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


இதற்கும் மேலாக ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கிறது. இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத கடன் செயலிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கிக் கண்டறிந்துள்ளது. கடன், இன்ஸ்டா கடன் வழங்கும் செயலிகள் மொத்தம் 1100 உள்ளதாகக் கண்டறிந்துள்ளது ரிசர்வ் வங்கி, இது பாதிக்கும் மேல் அதாவது 600 செயலிகள் போலியானவை எனக் கண்டறிந்துள்ளது. ஆன்லைனில் கடன் வழங்குவதாக எளிய மக்களிடம் மோசடியில் ஈடுபடும் இத்தகைய செயலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் கடன் செயலிகள் குறித்து 2562 புகார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான புகார்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பதிவானவை. அடுத்தபடியாக கர்நாடகா, டெல்லி, ஹரியாணா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆகையல் எச்சரிக்கையுடன் இருப்பதே ஒரே வழி.




கடன் வாங்குவதில் ஒழுக்கம் தேவை:


கடன் வாங்குவதில் ஒழுக்கம் தேவை என்றே ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. கடன் செலுத்துவதிலும், வாங்குவதிலும் நாம் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் நம்மை நம்பக்த்தன்மை உடையவராக சமூகத்தில் பிரதிபலிக்கும். நம் வருமானம் எவ்வளவோ, நம் தேவை என்னவோ அதன் அடிப்படையில் அவசரத்துக்காகவும், அவசியத்துக்காகவும் மட்டுமே கடன் பெறுவதுதான் கடன் ஒழுக்கம். இதை நாம் கடைப்பிடிப்போமேலேனால் வாழ்வு வளமாக இருக்கும். கடன் வாங்குவதைக் காட்டிலும் சேமிப்புகளைப் பெறுக்க வேண்டும். அதுவே அவசரத்துக் கை கொடுக்கும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கும் சேமிப்பு பழக்கத்தையும் கற்பிக்க வேண்டும். சிக்கனமாக இருக்கவும் குழந்தைகளுக்கு கற்பித்தல் அவசியம். சிக்கனமும், சேமிப்பும் இருக்கும் இடத்தில் கடனுக்கான தேவையே இருக்காது.