சென்னையில் இருந்து அசாம் செல்லவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணி உடல் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இறந்த உடல் அரை மணி நேரமாக விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் தீபக் பால். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது சக நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு செல்லும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார்.




இந்த நிலையில், விமானம் கிளம்ப தயாராகும் அரைமணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக்பாலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக்பால் சற்று உடல்நலம் தேறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதிகாலை வேளையில் மீண்டும் தீபத்பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக்பால் மரணமடைந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர். இதையடுத்து, தீபக்பால் மீண்டும் விமான நிலையத்திற்கு அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டது. எடுத்து வரப்பட்ட அவரது உடலை, சென்னை உள்நாட்டு விமான முனையதிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக கிடப்பில் போட்டுள்ளனர்.




இதனால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபக்பாலின் இறந்த உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்தது. அவரது உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு படையினர் காவலில் இருந்தனர். ஆனாலும், ஒரு இறந்த உடல் மூடப்பட்டோ, இறந்த உடலுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதையோ கொடுக்கப்படாமல் மனிதாபிமானமே இன்றி அவரது உடல் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பின்னர் விமானத்துறை அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீபக்பால் இறந்தது குறித்து இரண்டு விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண