தனது காதலுடன் சேர்த்துவைக்கக்கோரி  பெண் ஒருவர் அவசர எண் 100-க்கு அழைத்து உதவிக்கேட்ட சம்பவம் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. ஆனால்  அப்பெண் போலீசார் உதவியுடன் தனது திருமணத்தையும் நடத்தி முடித்துள்ளார்.


காதலன்  மற்றும் காதலிக்கிடையே சண்டை என்பது எப்ப வரும் எப்படி வரும்னு சொல்லமுடியாது. ஆனால் அது வரதும் தெரியாது போறதும் தெரியாது என்றுதான் கூற வேண்டும். சில நேரங்களில் ஏற்படும் சண்டையின் காரணமாக தான் காதலன் அல்லது காதலி இருவரில் யாரோ ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறுகிறது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக யோசித்து தனது காதலை வென்றுள்ளார் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். அப்படி என்ன செய்தார் தெரியுமா?



நமக்கு அல்லது நம்மைச்சுற்றியுள்ள யாருக்கும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே நாம் போலீசுக்கு தான் தகவல் கொடுப்போம். இதற்காக அவசர எண் 100-க்கு பல முறை கால் செய்து பிரச்சனைக்கூறி தீர்வு கண்டுள்ளோம். ஆனால் காதலன்  மற்றும் காதலி இடையே ஏற்படும் சண்டைக்கும் அவசர எண் 100-க்கு அழைத்தால் பிரச்சனையைத் தீர்வு வைப்பார்கள் என்று அனைவரும் நம்ப வைத்துள்ளனர் மத்தியப்பிரதேசத்தைச்சேர்ந்த காதல் ஜோடிகள். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணும், சரணி பகுதியைச்சேர்ந்த ஒரு பையனும் காதலித்துவந்துள்ளனர். காதலனின் பிறந்த நாளன்று சில காரணங்களுக்காக அப்பெண் அந்தப் பையனுடன் பேசவில்லை. இதனால் கோபமடைந்த அப்பையன் தனது காதலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். காதலுடன் தொடர்ந்து பேசுவதற்கு பல முறை முயற்சித்தும் பலன் இல்லாத நிலையில்தான், இறுதியில்  அவசர எண் 100-க்கு கால் செய்து உதவிகேட்டார் என போலீசார் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.



மேலும் அவர்களிடம் அப்பெண் இதுவரை நடந்த அனைத்து விஷயங்களையும் கூறி தயவுசெய்து தனது காதலுடன் சேர்த்துவைக்குமாறு உதவிக்கேட்டுள்ளார். இப்படி ஒரு விநோதமான வழக்கு இதுவரை வந்தது இல்லை எனவும் இப்படியே விட்டுவிட்டால், அப்பெண் அசம்பாவிதமாக முடியக்கூடிய முடிவை எடுத்துவிடுவார் என்பதால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று  போலீசார் முடிவு எடுத்து விட்டனர்.


இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த பையனை காவல்நிலையத்திற்கு வரவழைத்த சிந்த்வாரா காவல்நிலைய போலீசார் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்போது தான்,“ நான் பேசும்போது அப்பெண் என்னிடம் பேசவில்லை“ எனவும் இதனால் தான் சண்டை பெரிதாகிவிட்டது என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட போலீசார் நகைத்துக்கொண்டே இரு வீட்டாரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேசியுள்ளார்கள்.


நடந்தவற்றைக்கூறி இரு வீட்டார்களையும் சமரசம் செய்து இவர்களுக்கு திருமணம்  செய்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இதற்கு ஒப்புக்கொண்ட குடும்ப உறுப்பினர்களும் அவரச எண் 100-க்கு உதவி கேட்ட காதல் ஜோடிக்கு ஆர்ய சமாஜ் மந்திரியில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.