நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, கிரிப்டோகரன்சியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே, க்ரிப்டோ கரன்சி குறித்த விவகாரங்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளன. பல்வேறு முதலீட்டாளர்களும் க்ரிப்டோ வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் பெறும் முயற்சிகளைச் செய்து வரும் சூழலில், பலரும் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பிட்காயின், ஈதெரியம், டாக் காயின் முதலான பல்வேறு க்ரிப்டோ கரன்சிகள் மைனிங் செய்தோ, விலை கொடுத்தோ, அந்த மதிப்புக்கு இணையான பொருள்களைக் கொடுத்தோ பெறக்கூடியவை.
க்ரிப்டோ கரன்சிகளைச் செயல்படச் செய்யும் தொழில்நுட்பம் `பிளாக்செயின்’ (Blockchain) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் டேட்டா பதிவுகளை மேற்கொண்டு, அதனை மாற்றவோ, நெட்வொர்க்கை ஏமாற்றவோ செய்வதைக் கடுமையானதாக மாற்றுகிறது. அதே போல, இந்த டேட்டாவை அனைவரும் பார்க்கும்படியும், பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாகக் காட்டப்படுகின்றன.
பிளாக் செயின் என்றால் என்ன?
பிளாக்செயின் என்பது பல்வேறு கணினிகளால் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க்குகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்யும் டிஜிட்டல் பதிவேடு. இந்த இணைப்புச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளின் விவரங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை புதிதாகப் பணப் பரிவர்த்தனை நிகழும் போதும், இந்த இணைப்புச் சங்கிலியிலும், பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவரின் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படும். Distributed Ledger Technology என்ற தொழில்நுட்பத்தின் கீழ், பிளாக்செயின் தொழில்நுட்பம் வேலை செய்கிறது. இங்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் `ஹேஷ்’ என்று அழைக்கப்படும் க்ரிப்டோகிராபிக் கையெழுத்துடன் பதிவு செய்யப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்திற்கான மற்றொரு உதாரணம், கூகுள் டாக். கூகுள் டாக் பயன்படுத்தி, ஒரு ஆவணம் ஒரு குழுவினருடன் பகிரப்படும்போது, அது அவர்களின் கணினிக்கு மாற்றப்படாமல், பலராலும் பயன்படுத்த முடியும் என்றவாறு மாறுகிறது. ஒரே நேரத்தில் பலருக்கும் ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் அனுமதியை இந்தத் தொழில்நுட்பம் வழங்குகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
ஒரு பிளாக்செயினில் மூன்று முக்கிய கருப்பொருள்கள் இருக்கின்றன. அவை பிளாக் (Block), நோட் (Node), மைனர் (Miner) என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு பிளாக்செயினில் பல்வேறு பிளாக்கள் வைத்திருப்பதோடு, ஒவ்வொரு பிளாக்கிலும் டேட்டா பதிவேற்றப்பட்டிருக்கும். இந்த டேட்டாவில் பணப் பரிவர்த்தனைகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தச் செயினை எந்த ஒரு தனி நபரோ, தனியார் நிறுவனமோ தங்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது.
இந்தச் செயினில் புதிய பிளாக்களை மைனிங் என்ற செயல்முறையின் மூலம் உருவாக்குபவர்கள் மைனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிகவும் கடினமாக கணக்குகளுக்கு விடை அளித்து அதன் மூலம் பிளாக்களில் டேட்டாவைச் சேகரிக்கச் செய்கின்றனர். ஒவ்வொரு பிளாக்கும் வெற்றிகரமாக மைனிங் செய்யப்பட்டவுடன், மைனர்களுக்குப் பணத் தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பிளாக்கும் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்தமாக செயின் உருவாகிறது. இந்த இணைப்புகளை நோட்கள் செய்கின்றன. மேலும் இந்த நோட்களால் மொத்த நெட்வொர்க்கும் இயங்குகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்