Union Budget 2022 Highlights in Tamil: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 


இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில் சில முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன?



  • இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் கத்தி சக்தி என்ற திட்டத்தின் மூலம் சாலைகள், ரயில்வே, விமானங்கள், கப்பல் போக்குவரத்து, பொது போக்குவரத்து உள்ளிட்ட 7 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

  • நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களில் உள்ள கணக்குகளில் இருந்து வங்கி கணக்குகளுக்கு பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

  • புதிய பொதுத்துறை கொள்கையின் மூலம் விரைவில் எல்.ஐ.சி நிறுவனங்களின் பங்குகள் ஐபிஓ மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 5ஜி தொழில்நுட்பத்தின் அலைக்கற்று விற்பனை இந்தாண்டு நடைபெறும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் விடப்படும்.

  • கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு 1லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • வரும் 2022-23 நிதியாண்டில் ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். இதை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஒரே வகுப்பு ஒரே செனல் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 முதல் 200 கல்வி செனல் தொடங்கப்படும். அவற்றை அந்தந்த மாநிலங்கள் மாநில மொழியில் மாற்றி கல்வி கற்க பயன்படுத்தி கொள்ளலாம்.

  • டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிமேல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 30 சதவிகித வரி விதிக்கப்படும்.

  • திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
    2022-23ஆம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் 80 லட்சம்  வீடுகள் கட்டி முடிக்கப்படும்.

  • மத்திய, மாநில அரசு ஊழியகளின் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தும் தொகையில் இருந்து டிடிஎஸ் வரம்பு 10 சதவிகிதத்திலிருந்து 14% சதவிதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • 14 துறைகளுக்கு உற்பத்தி சான்ற சலுகைகள் அளிக்கும் திட்டத்தின் மூலம் நாட்டில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • 2022-23ஆம் ஆண்டில் மத்திய நெடுஞ்சாலைகள் 25ஆயிரம் கிலோ மீட்டர் அமைக்கப்படும்.

  • விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு உதவ கிஷான் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். விவசாய நிலங்கள் தொடர்பானவற்றை டிஜிட்டல் மயமாக்க,பூச்சி கொல்லிகள் அடிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

  • 2022-23ஆம் ஆண்டு சிப் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட் வழங்கப்படும்.

  • ஒரே நாடு ஒரே பதிவு என்ற கணினி மென்பொருளை மாநிலங்கள் ஒரே விதிமான பத்திரப்பதிவிற்காக பயன்படுத்தி கொள்ளலாம். 


இவ்வாறு மத்திய பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.