" பப்ஜி" விளையாட்டுக்கு ரசிகர்கள் ஏராளம்.குறிப்பா இந்தியாவுல இந்த விளையாட்ட கொண்டாடி தீர்த்தாங்க. பட்டித்தொட்டி எங்கும் பப்ஜியின் நீட்சியை பார்க்க முடிந்தது. ஆனால் சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.


இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு  மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல்  கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி  ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, பப்ஜியை விட சிறந்த விளையாட்டை தங்கள் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற போட்டா போட்டி கேமிங் நிறுவனங்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது. 




இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி க்ராஃப்டன் நிறுவனம் மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது .இது பப்ஜி வருகையை உறுதிப்படுத்துவதோடு அது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்ட பப்ஜி மீண்டும் உள்ளே வருகிறது என்றால் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பு:


ஏற்கெனவே தடை செய்யப்பட்டு மீண்டும் உள்ளே வர இருப்பதால் பப்ஜி இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆன்லைன் விளையாட்டு என்றாலும் இந்திய எல்லையைத் தாண்டி யாருடனும் சேர்ந்து நாம் விளையாட முடியாது. முன்பு உலகளவில் யார் கூட வேண்டுமானாலும் இணைந்து விளையாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தமுறை பப்ஜி இந்தியாவுக்குள் மட்டுமே விளையாட முடியும். விளையாட்டில் எல்லை தாண்டி கூட்டணி வைக்க முடியாது.




18 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 


இந்த முறை பப்ஜி விளையாடுபவர்களுக்கான வயது வரம்பில் அந்நிறுவனம் கரார் காட்டுவதாக தெரிகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தானக இன்ஸ்டால் செய்து விளையாடும் முடியும் என்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்றே விளையாடும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிகிறது. வயதுவரம்பை தீர்மானிப்பதை பப்ஜி எந்த அளவுக்கு சாத்தியப்படுத்த முடியும் என்ற சந்தேகங்கள் எழுந்தாலும், வயதுவரம்பில் நிச்சயம் உரிய கட்டுப்பாடுகள் உண்டு என்றே கூறப்படுகிறது. அதுபோல 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும், அதேபோல ரூ.7000க்கு மேல் பப்ஜியில் செலவு செய்ய அனுமதி இல்லை.







இந்தியாவில் சேமிக்கப்படும் தரவுகள்:


பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமே தரவுகள் இந்தியாவை விட்டு வெளியே செய்வது தான். அதனால் இந்த முறை தரவுகள் சேமிக்கப்படுவதில் பப்ஜி தனிக்கவனம் செலுத்தும் என தெரிகிறது. இந்திய பப்ஜி பயனர்களின் தகவல் இந்திய எல்லைக்குள் உள்ள சர்வரில் மட்டுமே சேமிக்கப்படும் என்றும், இந்தியாவை விட்டு வெளியேறாது எனவும் தெரிகிறது.