சீன செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்போ, புத்தாண்டு அறிமுகமாக Reno7 என்ற செல்ஃபோனை அறிமுகப்படுத்துகிறது. ரெட் வெல்வெட் நிறத்தில் அதாவது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இந்த ஃபோன்கள் புத்தாண்டு ஸ்பெஷல் எடிசனாக வெளியாகின்றன.


அத்துடன் இன்னொரு சிறப்பம்சமாக இதன் பின்னால் ஒரு புலி லோகோவும் இடம்பெறுகிறது. சீனப் புத்தாண்டை ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்குடன் தொடர்புப் படுத்திக் கொண்டாடவது சீனர்களின் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புலியை சீனர்கள் புத்தாண்டு விலங்காகக் கொண்டாடுகின்றனர்.


அதனையொட்டியே, 2022 புத்தாண்டு ஆப்போ ரெனோ 7 ஸ்மார்ட்ஃபோனின் பின்புறத்தில் புலி லோகோ பொரிக்கப்பட்டுள்ளது. சீன புத்தாண்டுடன் சிவப்பு நிறமும் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பம்சங்கள் என்னென்ன?


ஆப்போ ரெனோ 7 புத்தாண்டு எடிசன் ஃபோனில் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதன் விலை சீன யுவானில் 2,699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.32,000. இதுபோலவே 12GB RAM, 256GB வேரியன்ட் ஃபோனும் வருகிறது. இதன் விலை சீன யுவானில் 3,299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40,000. 


ரெனோ 7 புத்தாண்டு எடிசன் மொபைல்களில் கடைகளில் நேரடியாக வாங்க இயலாது. ஆப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ப்ரீ புக்கிங் செய்ய வேண்டும். டிசம்பர் 27 (இன்று) ஆப்போ அந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் இது விற்பனைக்கு வந்தாலும், சர்வதேச சந்தை தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் இல்லை.


இப்போதுள்ள ரெனோ 7க்கும் புத்தாண்டு எடிசனான ரெனோ 7க்கும் என்ன வித்தியாசம் என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ரெட் வெல்வெட் நிறம், டைகர் லோகோவைத் தவிர வேறு ஏதுமில்லை எனத் தெரிகிறது. ரெனோ 7 ஸ்பெஷிஃபிகேசன்ஸை ஒத்தே இதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. இதுவும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தையே கொண்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 778 பிராசஸர், 6.43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் அமோலெட் ஸ்க்ரீன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் திறன் கொண்டுள்ளது.


புகைப்பட திறனைப் பொறுத்தவரையில் ஆப்போ ரெனோ 7 ரெட் வெல்வெட் நியூயியர் எடிசனில், 32 MP செல்ஃபி ஷூட்டர் வசதி உள்ளது. 64 MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட், 2MP மேக்ரோ யூனிட்ஸ் திறன் கொண்ட கேமரா உள்ளது. 


புத்தாண்டுக்கு புது பிராண்ட் ஃபோன் வாங்க வேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்கு இந்த புதிய எடிசனான ஆப்போ ரெனோ 7 ரெட் வெல்வெட் நிற ஃபோன் நல்ல சாய்ஸ் என கேட்ஜட் குருக்கள் பரிந்துரைக்கின்றனர்.