மெட்டா குழுமத்தைச் சேர்ந்த வாட்ஸ்அப் புதிய சேவைகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது புதிதாக குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். Poll ஆப்ஷன் ஏற்கனவே பேஸ்புக்கில் நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்த விஷயம். வாட்ஸ்அப்பில் எப்படி என்றால், குரூப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, பலவித ஆப்ஷனோடு ஓட்டெடுப்பு நடத்தலாம். எந்த ஆப்ஷனுக்கு குழுவின் உறுப்பினர்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இறுதியில் அறிய முடியும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளுக்கு இதுபோன்ற Poll ஆப்ஷன் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைக்கு iOS பீட்டா வெர்சனில் மட்டும் கிடைக்கிறது. டெஸ்டிங்கில் இருப்பதால் எப்போது முழுமையாக அறிமுகப்படுத்தப்படும் என இதுவரை தெரியவில்லை. வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பப்படும் செய்திகள் எண்ட் டு எண்ட் என்கிரிப்ட் முறையில் பாதுகாக்கப்படும். இதன் ஆன்ட்ராய்ட் வெர்சனுக்கு வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இனி குரூப்பில், திடீர் பிளான்கள், கோவா ட்ரிப்கள் குறித்த டிஸ்கஷங்களில் போலிங் இறுதி முடிவை தந்துவிடும் என்று இப்போதே ஆர்வமாகின்றனர். 



ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகவும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. அதில், எமோஜிகளுக்கு புதிய தோற்றம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய அனிமேஷன்களை வாட்ஸ்அப் நிறுவவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதுபோலவே புதிதாக ஒரு அம்சத்தினை நிறுவவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது குழுக்களை (Whatsapp Groups) போன்று வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளை (Whatsapp Community) உருவாக்க நிறுவனம் திட்டம் தீட்டிவருகிறது. இதற்கான பீட்டா அப்டேட்டும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. வெளியான தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது, பல குழுக்களை ஒருங்கிணைக்க கம்யூனிட்டிகள் உதவும் என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம், சிதறி கிடக்கும் குழுக்களை ஒருங்கிணைக்க உதவும் என்று வாட்ஸ்அப் நம்புவதாக செய்திகள் கசிந்துள்ளன.



அதே போல வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் படங்களை எடிட் செய்ய இன்னும் சில டூல்களையும் இணைத்திருக்கிறார்கள். அதில் Blur ஆப்சனும் ஒன்று. இதன் மூலம் பகிரவிருக்கும் ஒரு புகைப்படத்தில் நாம் விரும்பிய பகுதிகளை ப்ளர் செய்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு படத்தில் இருக்கும் மொபைல் எண்ணை மட்டும் ப்ளர் செய்துவிட்டு பகிர இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும். இதுவும் iOS இல் ஏற்கெனவே கிடைக்கிறது எனினும் வாட்ஸ்அப் ஐஓஎஸ்க்கும் ஆன்ட்ராய்டுக்குமான வித்தியாசத்தைக் குறைக்க முயற்சித்து வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஜனவரி மாதத்திற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பயனர்கள் தரப்பிலிருந்து வரும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் வாட்ஸ்அப் பரிசீலனை செய்து, நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, வாட்ஸ்அப் கணக்குகளின் மூலம் கொள்கை விதிமீறல்களில் ஈடுபட்ட 18 லட்சத்து 58 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்சப் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.