அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது ஆமைகள். அதனால் சில நாடுகளில் ஆமைகளை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆமை நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் . சில வகை ஆமைகள் அதிக நேரம் நிலத்தில்தான் வாழ்க்கின்றன. சில நீரில் . என்னதான் நீருக்குள் வட்டமிட்டு வந்தாலும் , தனது இனப்பெருக்கத்திற்கு ஆமை தேர்வு செய்யும் இடம் நிலம்தான் . அங்குதான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது ஆமைகள். ஆமைகளில் நிறைய வகைகள் இருப்பது நாம் அறிந்ததுதான். இந்த நிலையில் 66.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆமை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆமையானது சாஃப்ட்ஷெல் ஆமை இனத்தை சேர்ந்தது என்றும் இது டைனோசர்கள் அழிவதற்கு சற்று முன்பு அதாவது கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவில் வாழ்ந்த ஒன்று என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் டைனோசர்களோடு இந்த ஆமைகளும் வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது சாஃப்ட்ஷெல் ஆமைகள் பற்றிய ஆழமான புரிதலையும், அதன் பண்புகளையும் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனை Hutchemys walkerorum என அழைக்கின்றனர். Hutchemys walkerorum என்பது பிளாஸ்டோமெனைன்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ள ட்ரையோனிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆமையாகும். இது பார்ப்பதற்கு சாஃப்ட்ஷெல் ஆமைகளைப் போலவே உள்ளது. ஆனால் சாதாரண சாஃப்ட்ஷெல் ஆமைகளை விடவும் வலுவானதாகவும் , பெரியதாகவும் இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Hutchemys walkerorum தான் , சாஃப்ட் ஷெல் ஆமைகளின் முன்னோடி .
இந்த ஆமையின் புதைப்படிவ மாதிரி கடந்த 1975 ஆம் ஆண்டு ஒரு ட்ரைசெராடாப்ஸின் எச்சங்களுடன் கிடைத்ததாக கூறப்படுகிறது.ஆனால் அது கடந்த 2013 ஆம் ஆண்டு வரையில் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் இருந்தது. ஏனெனில் இ ந்த ஆமையின் பரிணாம உறவுகளை நன்கு புரிந்துகொள்ள நேரம் தேவைப்பட்டது. மற்ற டிரையோனிக்கிட்கள் அல்லது சாஃப்ட்ஷெல் ஆமைகளுடன் இந்த மாதிரியை ஒப்பிட்டுதான் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி டைனோசர் வாழ்ந்த காலம் என்பதற்கு பதிலாக ஆமைகள் வாழ்ந்த காலம் என்றே சொல்லலாம்.