புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் 'Delete for everyone' கொடுப்பதற்கு பதிலாக 'delete for me' கொடுத்துவிட்டு வருந்துபவர்களுக்காக அதனை பின் வாங்கும் ஆப்ஷனாக 'Undo' ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்-அப்


வாட்ஸ்-அப் இந்தியாவின் மிகப்பெரிய பயனர் எண்ணிக்கையை கொண்ட பரவலான ஆப். பல நாடுகளை காட்டிலும் இந்தியாதான் இதனை அதிகம் பயன்படுத்துகிறது. குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய ஆப்தான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த ஆப்பின் முதலீடு. எளிதாக யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்ய முடிந்த இந்த ஆப்பில் போட்டோக்கள், வீடியோக்களும் எளிதாக அனுப்ப முடியும் என்பதால் டெக்னாலஜியை புதிதாக பயன்படுத்துபவர்கள் கூட விரைவில் புரிந்துகொண்டு பழகிவிடுவதுதான் இதன் வெற்றி.


மெட்டா நிறுவனம், இந்த செயலியை பயன்படுத்துவதில் பயனர்களை திருப்தி அடைவதே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் அவ்வப்போது பயனர்களுக்கு இலகுவான விஷயங்களை அப்டேட் செய்து மென்மேலும் மெருகேற்றுவதே ஒரே பணியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.



வாட்ஸ்-அப்பில் நாம் செய்யும் தவறு


வாட்ஸ்-அப்பில் பொதுவாக நாம் செய்யும் தவறு போட்டோக்களை மற்றும் மெசேஜ்களை மாற்றி வேறொருவருக்கோ, அல்லது வேறொரு க்ரூப்புக்கோ அனுப்பி விடுவோம். சமயங்களில் அது மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். நண்பர்கள் குழுவில் அனுப்பவேண்டியதை ஃபேமிலி க்ரூப்பிலோ, ஆபீஸ் க்ரூப்பிலோ அனுப்பிவிட்டால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.


இதுபோன்ற பிரச்சனைகளை களைவதற்குதான் வாட்ஸ்-அப் 'delete for everyone' ஆப்ஷனை கொண்டு வந்தது. ஆனால் ஒரு மெஸேஜை செலக்ஸ்ட் செய்து டெலிட் செய்கையில் இரண்டு ஆப்ஷன்கள் காட்டும், ஒன்று ''Delete for me' மற்றொன்று 'delete for everyone'.


தொடர்புடைய செய்திகள்: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. உடனடி முன்பதிவு முறை ரத்து செய்த தேவசம் போர்டு


டெலிட் ஃபார் எவரிஒன்


இதில் டெலிட் ஃபார் எவரிஒன் கொடுத்தால்தான் எல்லோருக்கும் டெலிட் ஆகும். டெலிட் ஃபார் மீ கொடுத்தால் நமக்கு மட்டும் மெசேஜ் டெலிட் ஆகும். ஆனால் தவறாக அனுப்பிய பிறகு பலரது மனம் அமைதியாக இருக்காது, கைகள் துரிதப்படும். அந்த நேரத்தில் 'டெலிட் ஃபார் மீ'-ஐ தவறுதலாக தேர்வு செய்துவிடுவது ஒரு மிகப்பெரிய சாபமாக பல காலங்களாக இருந்து வருகிறது. அப்படி செய்து விட்டால் அந்த மெசேஜ் சென்ற தடமே நம் மொபைலில் இருக்காது. அது இருந்தால்தான் லாங் பிரெஸ் செய்து 'டெலிட் ஃபார் எவரிஒன்' கொடுக்க முடியும்.


இந்த அபத்தமும் பலருக்கு நிகழ்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி செய்யவே வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.



Undo ஆப்ஷன்


இந்த புதிய அப்டேட்டின் மூலம் நாம் டெலிட் ஃபார் மீ-ஐ தேர்வு செய்யும்போது, அதன் பிறகு ஒரு ஐந்து வினாடி கீழே ஒரு பாப்-அப் மெசேஜ் நிற்கிறது. அதில் 'message deleted for me' என்று எழுதப்பட்டு பக்கத்தில் 'UNDO' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் தவறுதலாக செய்திருந்தால் ஐந்து வினாடிக்குள் சரி செய்துகொள்ள முடியும். அந்த அண்டூ பட்டனை கிளிக் செய்தால் டெலிட் செய்த மெசேஜ் திரும்பவும் வந்துவிடும், நாம் மீண்டும் செலக்ட் செய்து சரியான முறையில் 'டெலிட் ஃபார் எவரிஒன்' கொடுத்துக் கொள்ளலாம். இதே போல வாட்ஸ்ஆப் மேலும் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது. 


மற்ற அப்டேட்கள்


அவதார் என்ற ஆப்ஷன் மூலம், பயனர்கள் தங்களுக்கான அவதாரங்களை உருவாக்கி அதைத் தங்கள் டிபி-யாக அமைக்க முடியும். இந்த அம்சம் சமீபத்திய iOS மற்றும் Android புதுப்பிப்புகளுடன் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் வாட்ஸ்-அப் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக 21 புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை மட்டுமர் படிக்கக்கூடிய செய்தியும் தற்போது அனுப்ப முடியும். ஒருமுறை அந்த செய்தியைப் பெறுபவர் அதைப் படித்த பிறகு சாட்டில் இருந்து மறைந்துவிடும். ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது.