அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை:


பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூறு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வரும் போராட்டக்குழுவினருடன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ,எ.வ.வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை தலைமை செயலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளித்தார்.


செய்தியாளர் சந்திப்பு:


அப்போது, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கையுடன், அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமானப்படை தளத்தின் பாதுகாப்பு அம்சங்களும் புதிய விமான நிலையத்தால் கேள்விக்குறியாகும் என தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த அமைச்சர்கள், மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் அடிப்படையில், விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் உள்ள சாதக, பாதகங்கள் தொடர்பான சாத்தியக்கூறு குறித்து சோதனையை நடத்தவே உலகளவியா ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளாக தெரிவித்தனர்.


அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு:


அதன்படி, ஒப்பந்தம் பெறும் நிறுவனம், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து முழுமையாக ஆராய்ந்து,  அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அங்கு விமான நிலையம் அமைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும். விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்களை இன்னலுக்கு உட்படுத்த நாங்கள் முனையவில்லை. போரட்டக்குழுவினரின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும், ஆய்வுக்காக வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும் கேட்டுக்கொண்டனர். பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவசாயிகள் பாதிக்காத வண்ணமே அரசின் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அமைச்சர்கள் உறுதிபட கூறினர். அதேநேரம், அரசின் சரியான முடிவு கிடைக்கும் வரை மாலை நேரத்தில் நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளதாகவும், போராட்டக்குழுவை சேர்ந்த சுப்பிரமணி தெரிவித்துள்ளார். 


3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தை:


3 மாதங்களுக்கு முன்பாகவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ,எ.வ.வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 13 கிராமங்களை சேர்ந்த  போராட்டக்குழுவினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏகனாபுரம் கிராமத்தின் பின்பகுதியில் இரண்டு ஓடுபாதைகள் அமைய உள்ளதாக, மாதிரி வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. அவை இரண்டிற்கும் இடையே பாயும் ஓடை தான், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் நீர்,  தடையின்றி பாய்ந்து கொசஸ்தலை ஆற்றில் சேர்வதற்கான வழித்தடமாக உள்ளது. அந்த ஓடை புதியதாக சுமார் 4,700 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள புதிய விமான நிலைய திட்டத்தால், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் 30 கிராமங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கி செல்லும் சூழல் ஏற்படும். வேளாண் பணிகளும் பாதிக்கப்படும். எனவே, பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரியிருந்தனர். புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரும் போராட்டக்குழுவினரின் கோரிக்கையை சார்ந்த ஒரு நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் எடுப்பார் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டன. இதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி போராட்டக்குழுவினர் பேரணியாக சென்றதை தொடர்ந்து, அவர்கள் இடைநிறுத்தப்பட்டு அமைச்சர்கள் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 


பந்தூரில் விமான நிலையம்:


சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.