சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 30 நாட்களில் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கூட்டநெரிசலால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ன என மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள்,குழந்தைகள், முதியவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டது.
அதேசமயம் வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவே, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்தது. இப்படியான குற்றச்சாட்டுகளை களையும் வகையில் தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சன்னிதானத்தில் உள்ள 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.