ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற வழிமுறையினை இனி தொடரப்போவதில்லை என UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட முக்கிய ஆவணமாகும். அரசு மற்றும் அரசு சாரா வேலைகள் அனைத்திற்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாக உள்ளது. அதோடு மட்டுமின்றி ஒரு செல்போன் நம்பர், கேஸ் இணைப்பு போன்றவை வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு இல்லாமல் எந்தப் பணியினையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். மேலும் தற்போது உள்ள இந்த கொரோனா காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால் ஆதார் எண் அத்தியாவசியமாக உள்ளது.
உதாரணமாக நாம் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், வேறு இடத்திற்கு இடம் பெயர்கிறோம் என்றால், ஆதாரில் உள்ள முகவரியினையும் கட்டாயம் மாற்றவேண்டும். இல்லாவிடில் அப்பகுதியில் கிடைக்கக்கூடிய எந்தவித அரசு திட்டங்களையும், நம்மால் பெற முடியாது. இச்சூழலில் தான் ஆதார் கார்டில் முகவரியினை மாற்றுவதற்கு யாரையும் தேடி நாடி செல்லாமல், வீட்டில் இருந்தே ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம் செய்துக்கொள்வதற்கான வசதியினை UIDAI கொண்டிருந்தது.
குறிப்பாக குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர்கள், வீட்டின் உரிமையாளர் போன்றவர்கள் மூலம் ஆதார் முகவரியைச் சரிபார்த்து ஒப்புதல் பெறலாம். இந்த முறையைப் பயன்படுத்த ஆதார் முகவரி மாற்றம் கோருபவரும் அதனைச் சரிபார்ப்பவரும் தங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இருவருக்குமே தங்களுக்குக் கிடைக்கும் பாஸ்வேர்ட் (OTP) மூலம் இந்த முகவரி மாற்றத்தை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக, முகவரி மாற்றத்தைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்க குடும்ப உறுப்பினரோ, உறவினர், நண்பர்களோ, வீட்டு உரிமையாளரோ சம்மதம் தெரிவிக்க வேண்டும். இப்படி எந்தவித ஆவணமும் இல்லாமலும் ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது.
ஆனால், ஆதார் கார்டில் முன்பு இருந்தது போன்று எந்த ஆவணமும் இல்லாமல் முகவரியினை மாற்றக்கூடிய நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து UIDAI ஒரு ட்விட்டர் பயனருக்கு அளித்த பதிலில், ஆதாரில் முகவரியினை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், மக்கள் அதற்கான முகவரிச் சான்று உள்ளிட்ட 32 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்து ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம் செய்யலாம் எனக்கூறியுள்ளது. எனவே இந்நிலையில், உங்களது ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வதற்கு இனி இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
முதலில், ssup.uidai.gov.in/ssup/ என்ற இணைய தளப்பக்கத்தினை ஓப்பன் செய்துக்கொள்ள வேண்டும்.
இதில் Update Aadhaar என்பதனை க்ளிக் செய்யவும்.
பின்னர், அதில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டினை உள்ளீடு செய்யவும். இதில் OTP னை கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளீடு செய்து login என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
உள்ளே நுழைந்ததும் உங்களது ஆதார் அட்டையின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
இறுதியில் முகவரிச்சான்றிற்கு தகுந்த 32 ஆவணங்களின் பட்டியில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முகவரியினை மாற்றம் செய்யவேண்டும்.