ஆப்பிள் நிறுவனம் ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்யும் வசதியுடைய நவீன சார்ஜரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓப்போ, ரெட்மி, விவோ, ஒன்ப்ளஸ், ரியல்மீ என நிறுவனங்கள் போட்டி போட்டு ஸ்பெசிஃபிகேஷன்களில் கவர்ச்சி கூட்டி வரும் இந்த காலகட்டத்தில், தனது கன்சிஸ்டன்சியை மட்டுமே முன்னிலையில் வைத்து இன்றுவரை வெற்றிகரமான நிறுவனமாக யாராலும் புறம் தள்ள முடியாமல் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது சில விஷயங்களில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றங்களை அளித்து வருகிறது. மெகாபிக்சல் என்ற வாக்கியத்தை வைத்து மற்ற நிறுவனங்கள் விளையாடும் நம்பர் கேமை ஆப்பிள் இன்றுவரை தொட்டதே இல்லை. நான்கு கேமரா, ஐந்து கேமரா என்று வளர்ந்து சென்று கொண்டே இருக்கும் இந்த நிறுவனங்களுக்கிடையில் இரண்டு, மூன்று கேமராக்களை தாண்டி இதுவரை வைத்ததில்லை.



சார்ஜரை பொறுத்தவரை, தற்போது வரை ஆப்பிள் நிறுவனம் 20 வாட் திறன் கொண்ட சார்ஜர்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் சீன நிறுவனங்கள் 80 வாட் வரை fast charging வசதி உடைய சார்ஜர்களை வழங்குகின்றன. ஆனால் தற்போது அதற்கான அப்டேட் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அந்நிறுவனம். Smart watch, Smartphone என அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், நவீன சார்ஜரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சார்ஜர் 35 வாட் திறன் கொண்ட type c சார்ஜர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஐபோன் 13 இன் சார்ஜர் 27W கொண்டது. தற்போது இந்த 35W சார்ஜர் வெளியானால் இன்னும் வேகமாக பயனர்கள் தங்களது ஐபோனை சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இந்த சார்ஜரைக் கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியுமாம். அத்துடன் ஒரு ஐபோன், ஒரு ஸ்மார்ட் வாட்ச் என இரண்டையும் ஒரே நேரத்தில் இந்த சார்ஜர் மூலம் charge செய்யலாம் எனவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.



இந்த சார்ஜர் வெளியானால் எக்ஸ்டரா கேபிள் அத்துடன் கொடுக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. பயனர்கள் தனியாக வாங்கிக்கொள்வது போலவே அமையும் என்று அறிக்கை கூறுகிறது. இன்னொரு செய்தியும் வலம் வந்துகொண்டிருக்கிறது, ஆப்பிள் நிறுவனம் அவர்களது சார்ஜர் டெக்னாலஜியை கேலியம் நைட்ரைடாக அப்டேட் செய்யவுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. அது அவர்களுடைய பழைய சார்ஜரை விட வேகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை. எல்லா உண்மையான தகவல்களும் சார்ஜர் மாடல் வெளிவந்தாலே உறுதிப்படுத்தப்படும்.