ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உண்டு. அந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பாதுகாப்பாகவும் , நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் பயனாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நம்பிக்கை. மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் , புதுப்புது அம்சங்கள் ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய காரணியாக உள்ளது. மேலும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதனை வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியாவிலும் ஆப்பிள் பிரியர்கள் ஏராளம். பலரும் ஐபோன் , ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


கட்டணம் உயர்வு:


அதேநேரம், ஆப்பிள் நிறுவன சாதனங்களில் குறிப்பிட்ட சேவைகளை பெறுவதற்கு பயனாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், வாராண்டி நிறைவடைந்த ஐபோனுக்கான பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணத்தை உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வாரண்டி நிறைவடைந்த ஐபோன்களுக்கான கட்டணம் 20 டாலர் அளவிற்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,654 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பழைய கட்டண முறை வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் எனவும், வாரண்டி நிறைவடைந்த ஐபோனின் பேட்டரியை மாற்றுவதற்கான புதிய கட்டண முறை மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில், வாரண்டி நிறைவடைந்த ஐபோனின் பேட்டரியை மாற்ற, சுமார் ரூ.7000 கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


யாருக்கு பாதிப்பு?


ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து ஐபோன் மாடல்களுக்கும் ஓராண்டு மட்டுமே வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடலை தவிர மற்ற அனைத்து ஐபோன் மாடல்களுக்கும், இனி புதிய கட்டண முறையே பொருந்தும். ஐபோன் 13 மாடலின் பேட்டரியை மாற்ற கூட, புதிய கட்டண முறையே பொருந்தும். அதேநேரம், இந்த புதிய கட்டண முறை ஆப்பிள் கேர் மற்றும் ஆப்பிள் கேர் + சந்தாதாரர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தாதாரர்கள், தங்களது ஐபோன் பேட்டரியின் திறன் அதன் உண்மையான திறனில் இருந்து 80% அளவிற்கு குறைந்தால், பழைய கட்டணத்திலேயே பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


புதிய ஆப்பிள் ஐபேட்:


இதனிடையே, தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவிலான OLED ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அந்த ஐபேட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவிலான திரையை கொண்டிருக்கும் இந்த ஐபேட்கள், அளவில் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 12.9 இன்ச் மினி எல்.ஈ.டி. ஐபேட் ப்ரோ மற்றும் வழக்கமான எல்சிடி திரையுடன் 11 இன்ச் ஐபேட் ப்ரோ என இரண்டு ஐபேட் மாடல்களை ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் சந்தையில் விற்று வருவது குறிப்பிடத்தக்கது.