ஒன்பிளஸ் நிறுவனமும் சில மாதங்களில் மடிக்கக்கூடிய மொபைல் போனை வெளியிட தயாராகி வருகிறது. மேலும் அறிக்கைகளின்படி நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசிகள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதோடு, அதே அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு பெரிய வெளியீட்டு நிகழ்வை OnePlus நடத்த வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
மடிக்கக்கூடிய மொபைல்போன்கள்
பிரீமியம் ஃபிளாக்ஷிப் மொபைல்கள் கொண்டு வரும் மடிக்ககூடிய வகையிலான மொபைல்போன்கள்தான் இப்போது ட்ரெண்ட். ஆச்சரியமளிக்கும் விதமான அந்த டிசைன் பலரை வாங்க தூண்டினாலும், எல்லோருமே அதனை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்னும் வரவில்லை. ஆனாலும் அந்த வகையான மொபைல்களை வெளியிட ப்ரீமியம் நிறுவனங்களான சாம்சங், ஓப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில். இந்த பட்டியலில் அனைவரும் விரும்பும் ஒன்பிளஸ் நிறுவனமும் இணைந்துள்ளதுதான் டெக்னோ உலகின் ஹாட் நியூஸ்.
டேப்லெட்டும் வெளியாகிறதா?
ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய மொபைலை வெளியிடும் இந்த அறிவிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்பிளஸ் 11 தொடரின் வெளியீட்டின் போது நிறுவனம் கூறிய கூற்றுடன் ஒத்துப்போகிறது. மடிக்கக்கூடிய சாதனங்கள் OnePlus இன் பெரும் திட்டங்களின், ஒரு பகுதியாகும். அந்த வகையில் மொபைல் மட்டுமல்ல, ஒரு டேப்லெட்டையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது. எனவே ஒன்பிளஸ் இன் இந்த முன்னெடுப்பு தொழில்நுட்ப உலகில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாறும். சாம்சங் அதன் அடுத்த நிகழ்வை ஜூலை இறுதியில் திட்டமிட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது, அதில் சாம்சங் அடுத்த ஜென் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் ஃபிளிப் 5 சாதனங்களை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
X சீரிஸ் என்ற பெயர்?
சாம்சங் தனது சொந்த சந்தையான தென் கொரியாவில், இந்த ஆண்டு வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. அந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. OnePlus நிறுவனம், இந்த புதிய மடிக்கக்கூடிய மொபைல்களை X சீரிஸ் என்ற பெயரில் வெளியிடும் என்று கூறப்படுகிறது. OnePlus அதன் மடிக்கக்கூடிய மொபைல்களுக்கு, அந்த வகை மொபைல்களில் முன்னோடியான Find நிறுவனத்தின், N3 மடிப்பு வடிவமைப்பைப் பயன்படுத்தலாம் என்றும், அதோடு வன்பொருள் தொழில்நுட்பம் கூட அதிலிருந்து பகிரப்படும் என்று சில உத்தேசமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னென்ன அம்சங்கள்? என்ன விலை?
OnePlus மடிக்கக்கூடிய மொபைல், 6.5 அங்குல வெளிப்புறத் திரையுடன் வரலாம். இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகின்றது. OnePlus ஆனது வழக்கம்போல், Hasselblad உடனான அதன் தொடர்பை கேமராவுக்கு பயன்படுத்தலாம். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்கலாம். விலையைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் கொஞ்சம் பிரீமியம் ரேஞ்சிலேயே இருக்கும். பொதுவாக மடிக்கக்கூடிய பிரிவு இன்னும் வெகுஜன மக்களை எட்டவில்லை என்றாலும். ஒன்பிளஸ் ஃபிளிப் மாடலின் விலை சுமார் ரூ.90,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஃபோல்ட் எடிஷன் ரூ. 1 லட்சம்+ வரம்பில் வரலாம்.