தியேட்டரில் ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அனுமனுக்கு ஒரு சீட் காலியாக விட வேண்டும் என இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்தது பேசுபொருளாக இணையத்தில் மாறியுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது வரும் ஜூன் 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.
கடந்தாண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை பெற்றது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேமில் வருவது போல இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.
அனுமாருக்கு ஒரு சீட் பார்சல்
ஆனால் ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. காரணம் ரசிகர்கள் பெரிய அளவில் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். முன்னதாக திருப்பதியில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சன்னி சிங் மற்றும் ஓம் ராவத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது இயக்குநர் ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிம், விநியோகதஸ்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கிடையில் ஓம் ராவத் கோரிக்கை குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
10 சீட் கொடுக்க ரெடி
அதில், ஆதிபுருஷ் காட்சிகளில் அனுமனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். நாங்கள் இதை பெரிய விஷயமாக கருதவில்லை. காரணம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் சினிமாவில் சென்டிமென்டான விஷயம் உண்டு. 40 வருடங்களுக்கு முன்பு, 100 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படங்கள் ஓடியது உண்டு. இப்போது அதிகப்பட்சம் 3 நாட்கள் மட்டும் தான் ஹவுஸ்ஃபுல் ஆகிறது. அதனால் ஆதிபுருஷ் படத்துக்கு அனுமனுக்கு ஒரு சீட் இல்லை.. 10 சீட் கொடுக்க ரெடியாகவே உள்ளோம். இந்த படம் தமிழ்நாட்டில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருக்கப்போவதில்லை.
இதற்கு முன்பு தேவரின் ‘தெய்வம்’ படத்துக்கு முருகர் சிலையும், ஆடிவெள்ளி படத்துக்கு தியேட்டர் முன்பு ‘வேப்பிலை தோரணம்’ எல்லாம் கட்டப்பட்ட சம்பவம் நடந்தது. தியேட்டருக்குள் மதத்தை நுழைப்பது பக்திக்காக கிடையாது. மக்களை வர வைக்கத்தான். இதனால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என நினைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.