ஒன்பிளஸ் நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகளைக் குறைத்து, சீனா மற்றும் இந்தியாவில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் தலைமை மாற்றங்கள், பணிநீக்க இழப்பீடுகள் மற்றும் தாய் நிறுவனமான ஒப்போ உடனான ஒருங்கிணைப்பு ஆகியவை, இந்த மூலோபாய மாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன.

Continues below advertisement

ஜனவரி மாதமே தொடங்கிய புரளி

முக்கிய உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனம் மூடப்படவிருப்பது குறித்த வதந்திகள் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிய நிலையில், இந்திய தலைமைச் செயல் அதிகாரி ராபின் லியு அவற்றை நிராகரித்து, வணிகச் செயல்பாடுகள் "வழக்கம் போல் தொடர்கின்றன, இனியும் தொடரும்" என்று கூறியிருந்தார். 

அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு தற்போது அந்த தகவல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. லியு நிறுவனத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த ஊகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இணைய தகவலாளர் யோகேஷ் பிரார், தற்போது நீக்கப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவில் குறைந்த விலை மற்றும் நடுத்தர விலை தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, ஒன்பிளஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலிருந்து வெளியேறவிருப்பதாகக் கூறியிருந்தார்.

Continues below advertisement

அப்படி இந்த முடக்கம் நிகழ்ந்தால், அது அடுத்த மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதாவது, அந்நிறுவனம் 2026 ஏப்ரல் மாதத்திலேயே ஐரோப்பாவின் சில பகுதிகளில் தனது செயல்பாடுகளை நிறுத்தக்கூடும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதற்கான சரியான காலக்கெடு ஏதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் எப்படிச் செயல்படுகிறது.?

2018-ல் ஒன்பிளஸ் நிறுவனத்தில் இணைந்து, சமீபத்தில் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த ராபின் லியு, "தனது தனிப்பட்ட விருப்பங்களைத் தொடர்வதற்காக" செவ்வாயன்று தனது பதவியிலிருந்து விலகினார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது கடைசி வேலை நாள் மார்ச் 31 என்றும், அவர் ஏற்கனவே சீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதோடு, சில பிராந்தியங்களில் உள்ள ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, சிலருக்குப் பணிநீக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வணிக ரீதியாக, சைபர்மீடியா ரிசர்ச் நிறுவனத்தின்படி, 2025-ம் ஆண்டில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் விற்பனை 32 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஐடிசி நிறுவனம், ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்தச் சரிவு 38.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடுகிறது. 

மேலும், ஒன்பிளஸ் ஓபன் 2 மற்றும் ஒன்பிளஸ் 15எஸ் ஆகியவற்றுக்கான திட்டங்களையும் அந்நிறுவனம் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தனது நடுத்தர விலை மாடலான நார்ட் 6 அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

உலகளாவிய பயனர்களின் நிலை என்ன.?

இந்த தகவல்கள் ஒருபுறமிருந்தாலும், பல ஒன்பிளஸ் சாதனங்கள் இன்னும் உருவாக்கத்தில் உள்ளன. இருப்பினும், சீனாவிற்கு வெளியே அவை கிடைப்பது குறைவாக இருக்கலாம். மேலும், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் சமூக சேவைகள் உட்பட, தற்போதுள்ள பயனர்களுக்கான நீண்டகால ஆதரவு குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

ஓப்போவின் கீழ் இயங்கும் ரியல்மீயில் ஏற்பட்டதுபோன்ற மாற்றங்களையே இந்த நிலைமையும் பிரதிபலிக்கிறது. ஒன்பிளஸ் இதற்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவையும், சேவை உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தாலும், ஒரு உலகளாவிய தனித்த பிராண்டாக அதன் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாகத் தெரிகிறது.