ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில், சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. 


ஐபோன் 15 சீரிஸ் விற்பனை:


கடந்த 12ம் தேதி நடபெற்ற ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சி, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரீஸ் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  அவற்றின் விற்பனை இந்தியாவில் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 


காத்திருந்த வாடிக்கையாளர்கள்:


இந்நிலையில், இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்களில் நேற்று முதலே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர். ஐபோன் 15 சீரிஸின் முதல் போனை வாங்கி அந்த அனுபவத்தை பெற பலரும் தீவிரம் காட்டினர். மும்பையை சேர்ந்த ஒருவர் 17 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, ஐபோன் 15 சீரிஸ் செல்போனை வாங்கியுள்ளார். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி வழங்குவது மற்றும் நேரடி விற்பனை ஆகிய இரண்டும் ஒரே நாளில் இன்று தொடங்கியது. சர்வதேச சந்தையிலும், இந்தியாவிலும் ஐபோன் விற்பனை ஒரே நாளில் தொடங்குவது இதுதான் முதன்முறையாகும். 


அறிமுக சலுகை:


ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு என ஆப்பிள் நிறுவனம் பிரத்யேக சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தி இணையதளத்தில் வாங்கும் பயனாளர்களுக்கு,  iPhone 15 Pro மற்றும் Pro Max இல் ஆறாயிரம் ரூபாயும் , iPhone 15 மற்றும் 15 Plus மாடல்களுக்கு 5,000 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, 



  • iPhone 15 ஆனது அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையான ₹ 79,900 இல் இருந்து தள்ளுபடியுடன் ரூ. 74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது

  • iPhone 15 Plus ஆனது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.89,900 இலிருந்து தள்ளுபடி மூலம் ரூ.84,900 க்கு கிடைக்கிறது 

  • iPhone 15 Pro ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.1,34,900-லிருந்து  தள்ளுபடி மூலம் ரூ.1,28,900-க்கு  விற்பன செய்யப்படுகிறது

  • iPhone 15 Pro Maxஐ ரூ.1,53,900 க்கு வாங்கலாம். ஆனால், அதன் உண்மையான நிர்ணயிக்கப்பட்ட விலை

  • ரூ.1, 59,900


மாதாந்திர தவணை தொகை அடிப்படையிலும் ஐபோன்களை வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கிகளில் 3 அல்லது 6 மாதங்களுக்கு No-cost EMI ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கானவே கைவசம் உள்ள ஐபோன்களை எக்சேன்ஜ் செய்தும் புதிய ஐபோன்களின் விலையில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


'மேட்-இன்-இந்தியா' ஐபோன் 15: 


ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 யூனிட்களை தான் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்பட்டது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 யூனிட்களும் அதே நாளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனம்  ஐபோன் அசெம்பிளியை கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. அப்போதிருந்து ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்து வந்தாலும், இங்கு உற்பத்தியாகும் ஐபோன்கள் தாமதமாகவே வ்ற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், இந்த முறை எந்தவித தாமதமும் இன்றி ஒரே நாளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள், கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் தொழிற்சாலையில் ஐபோன் 15 தயாரிப்பைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.