ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடலான ஐபோன் 13 ஐ சந்தைப்படுத்தியது. இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் ஐபோன் 14 குறித்த தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கிவிட்டன. அதன் படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 14 ஐ ஆப்பிள் சந்தைப்படுத்தும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதன் சோதனை ஓட்டம் துவங்கியிருப்பதாக சில அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.எல்லாம் திட்டமிட்டப்படி சரியாக நடந்தால், வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆப்பிள் வணிக உற்பத்தியைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு மாடல்களில் ஐபோன் 14 :
ஐபோன் 14 ஆனது இம்முறை நான்கு மாடல்களில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. அவை ஐபோன் 14, புதிய 6.7-இன்ச் ஐபோன் 14 பிளஸ்/மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகும்.
”வேற லெவலில் இருக்கும்” - ஆப்பிள் :
ஆப்பிள் நிறுவனம் தனது சப்ளையர்ஸிற்கு ஐபோன் 14 குறித்தான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொபைல் வெளியானதும் அதற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. ஐபோன் 14 இன் விற்பனையானது ஐபோன் 13 இன் விற்பனையை விஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, இது 2021 இல் வலுவான தொடக்கத்தைக் கொண்டிருந்தது என்பது நினைவுக்கூறத்தக்கது.
பகல் கனவு காண்கிறதா ஆப்பிள் :
ஐபோன் 14 ஐபோன் 13 ஐ விட குறைவான மேம்படுத்தல்களைக் கொண்டிருக்கும் என்றும் பணவீக்கம் காரணமாக $ 100அதிகமான விலையிலேயே இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.ஐடி ஹோம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஆப்பிள் உயர்நிலை ஸ்மார்ட்போன் சந்தையில் கவனம் செலுத்துகிறது, மேலும் உணவு மற்றும் எரிபொருள் போன்ற முக்கிய பொருட்களின் பணவீக்கம் ஆப்பிளின் ஒப்பீட்டளவில் பணக்கார பயனர் தளத்தில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்" என குறிப்பிட்டுள்ளது. பெரிதாக ஆப்பிள் 14 இல் மாற்றம் இருக்காது. வடிவமைப்பு , iPhone 13 இல் உள்ள அதே A15 பயோனிக் சிப்,90Hz உயர் புதுப்பிப்பு வீதக் காட்சி உள்ளிட்ட முந்தைய வசதிகள்தான் இதிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த சிறிய மேம்படுத்தல்களுக்கு ஆப்பிள் $100 அதிகமாக வசூலிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மொபைல் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகுதான் ஆப்பிளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை கணிக்க முடியும்!