இந்திய மொபைல் போன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். புதிதாக விற்கப்படும் ஐபோன்கள், அதிலும் குறிப்பாக, ஐபோன் 17 மாடல்கள், வாங்கிய 90 நாட்களுக்குள் வெளிநாட்டு சிம் கார்டுகளுடன் செயல்படுத்தப்பட்டால், மிகப் பெரிய அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர். அது எதற்காக என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஆப்பிள் விநியோகஸ்தர்கள் விடுத்த எச்சரிக்கை என்ன.?
இது தொடர்பாக ஆப்பிள் விநியோகஸ்தர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், "உங்கள் விற்பனை நிலையத்திலிருந்து விற்கப்படும் எந்தவொரு சாதனமும், 90 நாட்களுக்குள் வெளிநாட்டு சிம் கார்டுடன் செயல்படுத்தப்பட்டாலோ அல்லது பயன்படுத்தப்பட்டதாகவோ கண்டறியப்பட்டால், உங்கள் விற்பனை நிலையத்திற்கு அதிக அபராதம் விதிக்கப்படும். மேலும், நிறுவன கொள்கையின்படி, கடை குறியீடு(Store Code) தடுக்கப்படலாம்(Block)" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எச்சரிக்கைக்கு காரணம் என்ன.?
ஐபோன் 17 மாடல்கள், இந்திய சந்தைகளைவிட, ரஷ்யா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அதிக லாபம் ஈட்டும் மாடலாக உள்ளது. இதனால், இந்தியாவிற்கு வரும் ஐபோன் 17 மாடல் போன்கள், அந்த இடங்களுக்கு மொத்தமாக திருப்பி விடப்பட்டதால், இந்திய சந்தையில் இந்த மாடல்கள் கிடைக்காமல் ஐபோன் பிரியர்கள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், ஆப்பிள் விநியோகஸ்தர்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்த ஐபோன் ஏற்றுமதியில், 3 முதல் 5 சதவீதம் அதிகாரப்பூர்வமற்ற ஏற்றுமதிகளிலிருந்து வருவதாக தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில், கிட்டத்தட்ட பாதி ரஷ்யாவிற்கு செல்கிறது. அங்கு உக்ரைன் போருக்குப் பிறகு ஆப்பிள் செயல்பாடுகளை நிறுத்தியது. ஆப்பிளின் ஐபோன் ஏற்றுமதி அக்டோபரில் 1.6 பில்லியன் டாலர்களை எட்டியது. இது இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கள்ளச் சந்தை திசைதிருப்பல் கடுமையான பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அடிப்படை ஐபோன் 17-ன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆப்பிளின் எச்சரிக்கைக்கு இந்திய சில்லறை விற்பனையாளர்கள் எதிர்ப்பு
ஆப்பிளின் இந்த உத்தரவு, தங்களை நியாயமற்ற முறையில் குறிவைத்து, பெரிய வடிவ கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு விலக்கு அளிப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் வாதிடுகின்றனர். "ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான தொலைபேசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன," என்று அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், உள்நாட்டு நுகர்வோருக்கான நிதிப் பலன்கள் தவறாக ஒதுக்கப்படுகின்றன என்றும், இது கேஷ்பேக் கோரிக்கைகள் மற்றும் ஜிஎஸ்டி குறைபாடுகள் மூலம் இழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.
டிசம்பருக்குள் விநியோக நிலைமை சீராகும் - டிம் குக்
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், நிறுவனத்தின் சமீபத்திய வருவாய் அழைப்பின் போது, விநியோகக் கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டார். வலுவான தேவை காரணமாக, பல ஐபோன் 16 மற்றும் 17 மாடல்களில் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக அவர் கூறினார். டிசம்பர் மாதத்திற்குள் விநியோக நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.