வாட்ஸ்-அப் குழுவில் புதியதாக இணையும் உறுப்பினர்களுக்காகவே பிரத்யேகமான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


வாட்ஸ் அப்:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான எளிமையான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. செயலியின் பயனாக்கத்தை மேலும் மேலும் மெருகூட்டவும், வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை துல்லியமாகவும், பல்வேறு விதமாகவும் பகிர்ந்துகொள்ளவும் அந்த செயலியில் அடுத்தடுத்து ஏராளமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பயனாளர்களே போதும் போது என கூறும் அளவிற்கு அப்டேட்கள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தான் புதியதாக மேலும் ஒரு புதிய அப்டேட் தற்போது சோதனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


குரூப் ஹிஸ்டரி ஷேரிங்:


வாட்ஸ்-அப் செயலியில் உள்ள பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமானது குரூப் அம்சம். இதில் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரே நிறுனத்தை சேர்ந்தவர்கள்  என பலதரப்பட்டோருக்கும் தனித்தனியே குழுவை உருவாக்கி அனைவருக்குமான தகவல்களை பொதுவாக அதில் பதிவிடலாம். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் குழு உறுப்பினர்களுக்கான புதிய அம்சமாக குரூப் ஹிஸ்டரி ஷேரிங் எனும் புதிய அப்டேட் வழங்கப்பட உள்ளது.


புதிய உறுப்பினர்களுக்கான அப்டேட்:


பொதுவாக புதியதாக குழுவில் இணைந்த நபர்களுக்கு, அதற்கு முன்பு வரை என்ன மாதிரியான உரையாடல் அங்கு நிகழ்ந்தது என்பது தொடர்பான எந்தவித தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அங்கு வரும் குறுந்தகவல்களுக்கு என்ன மாதிரியான பதிலளிக்க வேண்டும் என்பது தொடர்பான எந்த யோசனையும் இருக்காது. இதனை கருத்தில் கொண்டு தான்  குரூப் ஹிஸ்டரி ஷேரிங் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய உறுப்பினர் இணைந்த பிறகு, சரியாக அதற்கு முந்தைய 24 மணி நேரம் குழுவில் நடந்த முழு உரையாடல்களும் புதிய உறுப்பினருக்கு குறுந்தகவல்களாக சென்று விடும். இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதனை செயல்படுத்தும் அதிகாரம் குரூப் அட்மினுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழுவின் புதிய உறுப்பினர்களின் பெரும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.


பெயரே இல்லாமல் குரூப்:


இதனிடையே, வாட்ஸ் அப்பில் பெயர் வைக்காமலே குரூப் உருவாக்குவது போன்று புதிய வசதியை மெட்டா விரைவில் கொண்டு வர உள்ளது. ஏற்கனவே வாட்ஸ் ஆப்பில் குரூப் உருவாக்குவதற்கு பெயர் வைப்பது கட்டாயமாக இருந்தது. பொதுவாக ஒரு குரூப் கிரியேட் செய்வதற்கு பெயர் என்பது வைத்தால் மட்டுமே குரூப் கிரியேட் செய்யப்படும். இதனை பயனர்களுக்கு எளிதாக்கும் வகையில் மெட்டா புதிய அப்டேட்டை கொண்டு வர உள்ளது. அதாவது, பெயர் கிரியேட் செய்யாமலே குரூப்பை உருவாக்கலாம். அதன்படி, குரூப் கிரியேட் செய்யும் நபரின் எண் குரூப்பின் பெயராக உங்களது மொபைலில் தோன்றும்.