சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது.
சுமார் ஒன்றரை மாதங்கள் பயணம் மேற்கொண்டு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால் தடம் பதித்த ஒரே நாடு என்ற சாதனையை இந்தியா செய்துள்ளது. உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார்.
தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் கடந்த 22ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற, பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது, பிரேசில், சீனா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு விவகாரங்களில் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், பிரிக்ஸ் அமைப்பில் சவுதி அரேபியா உள்ளிட்ட 6 நாடுகளை புதியதாக இணைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் திரையிரங்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் இந்தியா திரும்பிய அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பெங்களூருக்கு வருகை தந்துள்ளார். காலை 7 மணிக்கு பெங்களூரு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர், “ சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் என் மனம் இங்கே தான் இருந்தது. இது ஒரு வித்தியசமான உணர்ச்சியை எனக்கு அளிக்கிறது. இந்த வெற்றியால் அலாதி மகிழ்ச்சி அடைந்தேன். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய பகுதி சிவசக்தி என அழைக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.