உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு,  3 இந்தியர்கள் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.


உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்:


நடப்பாண்டிற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரி தலைநகர் புத்தபெஸ்டில், கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் முடிய உள்ள இந்த தொடரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு பிரிவுகளில் இங்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


ஈட்டி எறிதல்:


ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீர்ஜ் சோப்ரா, டிபி மனு மற்றும் கிஷோர் ஜென ஆகிய மூன்று பேரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஒரே நேரத்தில் மூன்று இந்தியர்கள் தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 11.45 மணியளவில் இந்த போட்டி தொடங்க உள்ளது. தங்கப்பதக்கத்தை வெல்ல 3 இந்தியர்கள் உட்பட 12 பேர் போட்டி போட உள்ளனர்.






முதலிடத்தில் நீரஜ் சோப்ரா:


ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தகுதிச்சுற்று போட்டியில் அதிகபட்சமாக 88.77 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற குறைந்தபட்சம் 83 மீட்டர் தூரத்தை கடக்க வேண்டி இருந்தது. ஆனால், தகுதிச்சுற்றின் முதல் சுற்றிலேயே நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அசத்தியதால், தனது அடுத்த இரண்டு வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்தவில்லை.


பட்டியலில் இந்திய வீரர்கள்:



  • நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரம் எறிந்து தகுதிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்

  • டிபி மனு 81.31 மீட்டர் தூரம் எறிந்து 6வது இடத்தைப் பிடித்தார்

  • கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரம் எறிந்து 9வது இடத்தைப் பிடித்தார்.