உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் பயன்படுத்தப்படும் ஆப்பாக வாட்ஸ் அப்  இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் வாட்ஸ் அப்பை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாட்ஸ் அப்  வாயிலாக தவறான செய்திகளை அனுப்புவது, ஸ்பாம் செய்வது, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அந்நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது கணக்கை முடக்கவோ அல்லது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 


2014 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பை $19 பில்லியனுக்கு வாங்கினார் பேஸ்புக் ஓனர் மார்க். அந்த நேரத்தில் ​​இது மிகவும் விலையுயர்ந்த தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. இது மார்க் ஜுக்கர்பெர்க்கின் மிகவும் லட்சிய ஒப்பந்தங்களில் ஒன்றாகவும் கூறப்பட்டது. யாஹூவின் முன்னாள் ஊழியர்களான பிரையன் ஆக்டோம் மற்றும் ஜான் கோம் ஆகியோரால் 2009 இல் வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது. வாட்ஸ் அப்பின் முன்னேற்றத்தைப் பார்த்த மார்க் அதையும் தனக்கானதாக்கினார். செல்போனில் எஸ் எம் எஸ் என இருந்த தகவல் பரிமாற்றத்தின் அதே பாணியை வாட்ஸ் அப் தனி செயலி மூலம் கையில் எடுத்தது. 




மார்க் கைக்கு மாறியதற்கு பின் வாட்ஸ் அப்பில் பல அப்டேட்கள் வந்தன. வெறும் டெக்ஸ்ட் பரிமாற்றம் என்று இல்லாமல், போட்டோ, வீடியோ, லொகேஷன், பைல்கள், பண பரிவர்த்தனை என வாட்ஸ் அப் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்தது. அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி பயனர்களை இழந்த வாட்ஸ் அப், சிக்னல் போன்ற வேறு செயலிகளை களமிறக்கவும் வழி கொடுத்தது. இப்படி ஒருபக்கம் அப்டேட்கள், போட்டியாளர்கள் என பயணப்படும் வாட்ஸ் அப்பால் மார்க்குக்கு பெரிய லாபம் இல்லை என கூறுகிறது மெட்டா. அதிக பயனர்கள் இருந்தாலும்கூட அதற்கான வருமானத்தை வாட்ஸ் அப் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நம்மிடம் இருந்து தகவல்களை எடுத்து விளம்பரங்களுக்கு வாட்ஸ் அப் பயன்படுத்திக் கொண்டாலும் அது லாபகரமாக இல்லை என கூறுகிறது மெட்டா.


இப்படியே சென்றால் விரைவில் வாட்ஸ் அப்பை மார்க் விற்பனைக்கு உள்ளாக்குவார் எனக் கணிக்கின்றனர் தொழில்நுட்பவாசிகள். அல்லது ஓடிடி போல குறிப்பிட்ட சந்தா தொகை செலுத்தி வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் நிலைமை வரலாம் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் தொழில் ரீதியாகவும், பணி நிமத்தமாகவும் பலரும் தற்போது வாட்ஸ் அப்பை நம்பியே உள்ளதால் சந்தா என்றாலும்கூட வாட்ஸ் அப்பை பலர் பயன்படுத்துவார்கள் என்றே தெரிகிறது. அத்தியாவாசிய செயலியில் ஒன்றாகிவிட்ட வாட்ஸ் அப்பின் எதிர்காலம் என்னவாகப்போகிறது? மார்க் என்ன ப்ளான் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.