உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவாக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இன்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செஸ் ஒலிம்பியாட் போடடியை முன்னிட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ உள்விளையாட்டான செஸ் நான் மிகவும் விரும்புகிறேன். அனைத்து செஸ் மூளைகளுக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் உள்ளே செஸ் விளையாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். உலகின் ஜாம்பவான் செஸ் வீரர்கள் உள்பட 187 நாடுகளின் வீரர்கள் 600க்கும் மேற்பட்ட அணிகளாக பிரிந்து களமிறங்கியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 30 வீரர்களை கொண்ட 6 அணிகள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை அருகே நடைபெறுவதால் இதை பிரம்மாண்டமாக, வெற்றிகரமாக நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். தற்போது, இன்று தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டை பிரபலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள், பதாகைகள், நம்ம செஸ் நம்ம சென்னை போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பிரபலமான நேப்பியர் பாலம் ஏற்கனவே செஸ் போர்டு வடிவத்தில் மாற்றப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது, கருணாநிதியின் நினைவிடமும் செஸ் போர்டின் வடிவத்தில் மாற்றப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்