ஆடி அமாவாசையை முன்னிட்டு 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடினார்கள். இதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.

 

ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் புனித  நீர் நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்து புனித நீராடுவது இந்துகளில் கடமையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16  தீர்த்தங்களை இயற்கையாகவே கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து புனித நீராடுவதாக குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வருகை கொடுத்தனர். இங்குள்ள வேத விற்பனர்களிடம்  எள், பச்சரிசி, தர்பை, பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை  நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். இதுபோன்று இந்த நாட்களில் தர்ப்பணம் செய்வதால் தங்கள் முன்னோர்களால் சகல ஐஸ்வரியமும் கிடைப்பதாக தர்ப்பணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

 



 

முக்கடல் சங்கமத்தில் புனித நீராடியவர்கள் பின்னர் இங்குள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து சென்றனர். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போன்று குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளான குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர் நிலைகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மறைந்த முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்தனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் பொதுமக்கள் பலி கர்ம பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.