சமீக காலமாக ரோபோக்களின் வளர்ச்சி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான ரோபோக்கள்தான் சந்தையில் கலக்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் குழந்தைகளில் அடிப்படை திறனை மேம்படுத்தும் வகையில் சந்தையில் மோக்ஸி என்னும் குட்டி ரோபோ களமிறங்கியுள்ளது. பார்ப்பதற்கு பெண் குயின் போன்ற வடிவமைப்பில் காணப்படும் இந்த மினி ரோபோ குழந்தைகளுடன் நட்பு பாராட்டுமாம். நீர்த்துளி போன்ற வடிவமைப்பில் தலை , ஊதா நிறத்தில் உடல், அனிமேட்டட் செய்யப்பட்ட முகம் என குழந்தைகளை கவரும் அத்தனை அம்சத்துடனும் மோக்ஸி அறிமுகமாகியுள்ளது.5-10 வயது குழந்தைகளுக்கான இந்த ரோபோ அவர்களின்அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை ஊக்குவிக்க உதவுகிறது:. குறிப்பாக உணர்ச்சி கட்டுப்பாடு, நினைவாற்றல், சுவாசப் பயிற்சிகள், தியானம், நட்பு பாராட்டுதல் , மாற்றங்களை எதிர்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறது.






மேலும் பெற்றோரிடம் மனம் விட்டு பேச தயங்கும், தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்கின்றனர் இதனை உருவாக்கிய Embodied நிறுவனம். குழந்தைகளின் திறன் குறித்த தகவல்களை சேகரித்து ,அதனை இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைக்கிறது மோக்ஸி. இதன் மூலம் தனிமையில் இருக்கும் குழந்தைகளின் தேவை  என்ன, அவர்களின் திறன் மேம்பட என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய பரிந்துரைகளையும் மோக்ஸி வழங்குகிறது.மோக்ஸி குழந்தைகளுடன் குழந்தைகளாக ஒன்றிவிடுவதால் , விளையாட்டு அடிப்படையிலான கற்றல் அல்லது விளையாட்டின் மூலம் கற்றல் போன்றவற்றை ஊக்குவிக்கிறது. மேலும் படங்கள் வரைதல், படித்தல், கதைசொல்லல், கற்பனையான விளையாட்டு, நகைச்சுவை மற்றும் நடனம் போன்ற வேடிக்கையான செயல்பாடுகளின் மூலமும் கற்பித்தலை நிகழ்த்துமாம் மோக்ஸி.







குழந்தை மேம்பாட்டு நிபுணர்கள் மற்றும் ஸ்டோரி டெல்லர்ஸ் உதவியுடன் மோக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது.அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அதிக ஈக்யூ மற்றும் சமூகத்தில் ஆரோக்கியமான, மிகவும் சமநிலையான நபர்களாக வளர உதவும் மென்மையான திறன்கள் மோக்ஸியில் உள்ளது என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள் .TIME இன் சிறந்த கண்டுபிடிப்பு ,FAST COMPANY இன் புதுமையான கண்டுபிடிப்பு,DEZEEN இன் சிறந்த தயாரிப்பு,CES இன் மதிப்பு மிக்க புதுமையான கண்டுபிடிப்பு உள்ளிட்ட விருதுகளை கடந்த ஆண்டு பெற்றுள்ளது மோக்ஸி. இதன் விலை 999 டாலர். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமானால் 74,236 ரூபாயாகும்.