இன்று பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய செயலிதான் ‘கூ’. டிவிட்டர் போன்றே இதுவும் மைக்ரோ பிலாகிங் வெப்சைட்டாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கூ வலைத்தளம் மெல்ல மெல்ல தலைத்தூக்க துவங்கியுள்ள இந்த சூழலில் அந்த நிறுவனம் கூ பயனாளர்கள் அனைவரின் கணக்குகளையும் சரிபார்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.







அதன் படி சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளுக்கு கிடைப்பது போலவே ஊதா நிற , சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கான டிக் குறியீடு வழங்கப்படும். கணக்குகளை சரிபார்க்கும் பொழுது  , பயனாளர்களின் ஆதார் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாளத்தை பயனாளர்கள் இணைத்திருக்க வேண்டியது அவசியம் . இந்திய மொழிகளில் ட்விட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும் கூ, சரிபார்ப்புக்கு OTP மட்டுமே தேவைப்படும் என்பதால் ஆதார் தரவு சேமிக்கப்படாது என தெரிவித்துள்ளது.  பயனாளர்களின் கணக்குகளை சரிபார்க்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.






கடந்த புதன் கிழமை வெளியான இந்த அறிவிப்பின் படி ,இந்த புதிய வசதி தங்கள் தளத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்கிறது கூ. அரசு அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 4(7) க்கு உட்பட்டு இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ‘கூ’ தெரிவித்துள்ளது.


நீங்கள்  ’கூ’ கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் உங்கள் கணக்கை சரிபார்க்க கீழக்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்:


உங்கள் கூ செயலியில் உங்கள் profile ஐ திறந்து அதில்  Self-Verify என்னும் வசதியை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.


பின்னர் அதில் 12 இலக்க ஆதார் எண்ணை கொடுக்கவும்


அதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட  உங்கள்  மொபைல் எண்ணிற்கு வரும் OTP ஐ பதிவு செய்யவும்.


அதன் பிறகு உங்களது கணக்கு சரிபார்க்கப்படும் . பின்னர் உங்களது கணக்கின் பெயருக்கு பின்னால் ஊதா நிற டிக் கொண்ட சரிபார்ப்பு குறியீடு பதிவாகிவிடும்.