லக்னோ அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த டெல்லி பிரித்விஷா அதிரடியால் 149 ரன்களை குவித்தது. இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் கே.எல்.ராகுலும், குயின்டின் டி காக்கும் மிகவும் நிதானமாக ஆடினர். ஆனால், டெல்லியின் முக்கிய வீரர் நோர்ட்ஜே வீசிய 5வது ஓவரில் குயின்டின் டி காக் விளாசினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் டி காக் ஹாட்ரிக் பவுண்ரி, 1 சிக்ஸருடன் 19 ரன்கள் விளாசினார். லக்னோ அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்களை எடுத்தது.




கே.எல்.ராகுல் கிடைத்த பந்துகளை அடிக்க குயின்டின் டி காக் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளை விளாசினார். 10வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற கே.எல்.ராகுல் 25 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தார். லக்னோ 10 ஓவர்களில் 74 ரன்களை எடுத்தது. பின்னர், குயின்டின் டி காக்- லீவிஸ் ஜோடி சேர்ந்தனர். ஆனால், தொடக்கம் முதலே ரன்களை சேர்க்கத் தடுமாறிய லீவிஸ் 13 பந்தில் 5 ரன்களே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி 42 பந்தில் லக்னோ வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது.


16வது ஓவரை வீசிய டெல்லியின் பிரதான பந்துவீச்சாளர் நோர்ட்ஜே வீசிய முதல் இரு பந்துகளும் பீமராக அமைந்ததால் அவரது ஓவர் பாதியிலே நிறுத்தப்பட்டது. அவருக்கு பதிலாக வீசிய குல்தீப் யாதவின் பந்தில் குயின்டின் டி காக் பவுண்டரிகளாக அடுத்தடுத்து விளாசினார். அவரின் கடைசி பந்தில் குயின்டின் டி காக் சர்பாஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டி காக் 52 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதல் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த குயின்டின் டி காக் அவுட்டால் டெல்லி வீரர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.





இதையடுத்து, லக்னோவிற்காக குருணால் பாண்ட்யா – தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தனர். 17வது ஓவரை முஸ்தபிஷிரும், 18வது ஓவரை ஷர்துல் தாக்கூரும் கட்டுக்கோப்பாக வீசியதால் குருணால் பாண்ட்யாவால் ரன்களை சேர்க்க முடியவில்லை. இதனால், லக்னோவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் குருணால் பாண்ட்யா இமாலய சிக்ஸர் அடித்தார். இதனால், கடைசி 6 பந்தில் லக்னோ வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.


ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் தீபக்ஹூடா அக்ஷர் படேலிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தை டாட் பாலாக ஷர்துல் தாக்கூர் வீசினார். மூன்றாவது பந்தை பதோனி அற்புதமாக பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். இதனால், கடைசி 3 பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. 4வது பந்தை பதோனி சிக்ஸ்ர் அடித்து லக்னோ அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.




இந்த வெற்றி மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. பதோனி 3 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 10 ரன்களுடன் அணியை வெற்றி பெற வைத்தார். டெல்லி அணியில் நோர்ட்ஜே 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 35 ரன்களை வாரி வழங்கினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண