செல்போன்களின் தொடக்கக் காலங்களில் செல்போனை விடவும் சிம் கார்டுகளின் விலை அதிகமாக இருந்தது நினைவிருக்கலாம். இன்கம்மிங், அவுட்கோயிங் என இரண்டுக்குமே பயனாளர்கள் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. பின்னாட்களில் அதிகரித்த நெட்வொர்க் நிறுவனங்களால் போட்டி உலகமாக மாறி ஆஃபர்களை அள்ளி வீசத் தொடங்கின. பலபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்து காணாமலும் போனது. குறிப்பாக ஏர்டெல் களத்தில் நின்று விளையாடத் தொடங்கியது. வோடோபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஏர்டெல்லுடன் மல்லுக்கட்டின. சிறந்த நெட்வொர்க், பல ப்ளான்கள் என ஏர்டெல் அழுத்தமாக நின்றது. குறிப்பாக இண்டர்நெட் வரவுக்கு பிறகு ஏர்டெல் மேலும் தன் எல்லையை பரப்பியது. காட்டுக்குள்ளும் நெட் கிடைக்கும் போன்ற பிரத்யேக விளம்பரங்கள், 2ஜி, 3ஜி, 4ஜி என அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளித் தூவி தான் கொடுப்பதுதான் நெட் ப்ளான் என தனிக்காட்டு ராஜாவாக ஆண்டது ஏர்டெல். மாதத்துக்கு 2ஜிபி நெட் வைத்து ஓட்டிய காலங்கள் அவை.
'கடைசியாக தான் வந்து சேர்ந்தாரு விநாயக்’ என்று சொல்வது போல களத்தில் மாஸாக களம் இறங்கியது ஜியோ. அதன்பிறகு இண்டர்நெட் உலகில் ஏற்பட்டது பெரும் புரட்சி என்று கூட சொல்லலாம். தொடக்கத்தில் இலவசமாக இண்டர்நெட் கொடுக்கப்பட்டது. மாதத்திற்கு 2 ஜிபி என்று லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்ட இணைய உலகம், ஒரு நாளைக்கே 2ஜிபி என்ற அன்லிமிடெட் மீல்ஸால் நிறைந்தது. ஜியோ கொடுத்த ஆஃபர்களால் திக்குமுக்காடியது வாடிக்கையாளர்கள் மட்டுமே அல்ல. போட்டி நிறுவனங்களும் தான். ஜியோ அள்ளிக்கொடுக்கும் போது நாம் கிள்ளிக்கொடுத்தால் சரியாகுமா? என யோசித்த மற்ற நிறுவனங்கள் இறங்கி வரத் தொடங்கின. ஆனால் ஜியோ அளவுக்கு இறங்க முடியவில்லை. இதனால் காலம்காலமாக ஏர்டெல், வோடோபோன் என பயன்படுத்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அந்த சிம்கார்டை இன்கம்மிங்குக்கு மட்டுமே என பயன்படுத்தத் தொடங்கினர். பலரும் இண்டர்நெட் பேக்கேஜ் என்றால் ஜியோ தான் என்று ஒதுங்கத் தொடங்கினர். இதனால் அடிவாங்கியது ஏர்டெல், வோடோபோன்.
இன்கம்மிங்...
ரிசார்ஜ் என்ற பக்கமே பல வாடிக்கையாளர்கள் வராததால் லாபத்தில் சறுக்கின ஜியோவின் போட்டி நிறுவனங்கள். அப்போது இன்கம்மிங்குக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்தன. பல ஆண்டுகளாக பயன்படுத்தும் செல்போன் நம்பருக்கு இன்கம்மிங் முக்கியம் என நிச்சயம் வாடிக்கையார்கள் விரும்புவார்கள். அதனால் நிச்சயம் ஒரு ரீசார்ஜ் செய்யப்படும் என சரியாக கணித்து காய்நகர்த்தின. அதற்கு தொடக்க ரீசார்ஜாக ரூ.49 ஐ நிர்ணயம் செய்தது ஏர்டெல். இப்போது அந்த ப்ளானை கேன்செல் செய்துவிட்டு ரூ.79ஆக அதிகரித்துவிட்டது ஏர்டெல். கார்ப்ரேட் மூவாக இது பார்க்கப்பட்டது.
இப்போது எஸ் எம் எஸ்..
இன்கம்மிங்கில் காய்நகர்த்திய ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் அடுத்து எஸ் எம் எஸ்-ல் பார்வையை திருப்பின. ரூ.100க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ் இல்லை என்ற அறிவிப்புதான் அது. சரி போனால்போகட்டும், இப்போது எதற்கு எஸ் எம் எஸ்? என்று தோன்றலாம். அதற்கு பின்னாலும் ஒரு மாஸ்டர் ப்ளானை வைத்திருக்கிறது ஏர்டெல்.
எஸ் எம் எஸ் ஏன் முக்கியம்?
வாட்ஸ் அப் வருகைக்கு பிறகு எஸ் எம் எஸ் எல்லாம் கிட்டத் தட்ட வழக்கொழிந்தே போய்விட்டாலும், வங்கி, UPI போன்ற பல செயல்பாடுகளுக்கு இன்றும் எஸ் எம் எஸ்-ஐ தேடித்தான் போகவேண்டும். OTPயோ அல்லது வேரிபிகேஷன் மெசேஜோ அதற்கு எஸ் எம் எஸ்-ஐ நாட வேண்டும். பலருக்கும் தொடக்கக் கால தொலைபேசி எண்ணாக இருக்கும் ஏர்டெல், வோடோபோன் போன்ற மொபைல் எண்களைத் தான் வங்கிக் கணக்கு போன்ற இடங்களில் கொடுத்து வைத்திருப்பார்கள். இப்போது செல்போனிலேயே வங்கி பரிவர்த்தணைகள் நடைபெறும் நிலையில் பல வேரிபிகேஷன் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட எண்ணில் இருந்து எஸ் எம் எஸ் செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே நடக்கும். இதுதான் ஏர்டெல்லின் திட்டம். எடுத்துக்காட்டாக இப்போது நீங்கள் போன்பே செயலியை அப்டேட் செய்தால் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணில் இருந்து மெசேஜ் கேட்கிறது. பலருக்கும் அந்த எண், இன்கம்மிங்குக்கு மட்டுமே வைத்திருக்கும் பழைய எண்களான ஏர்டெல், வோடோபோன். இப்போது வேறு வழியே இல்லாமல் ரீசார்ஜ் செய்தே ஆகவேண்டிய கட்டாயம். அதுவும் ரூ.100க்கு மேல்.
இதுதான் கணக்கு..
இண்டர்நெட்டுக்கு ஜியோவுக்கு ரீசார்ஜ், இன்கம்மிங், எஸ் எம் எஸ்க்கு பழைய எண்ணுக்கு ரீசார்ஜ் என வாடிக்கையாளர்கள் அலைக்கழிந்து இரண்டும் ஒன்றாகவே இருக்கட்டும் என பழைய நெட்வொர்க்கை தேடி வருவார்கள் என்பது ஏர்டெல்லின் கணக்கு. ஆனால் ஜியோ அளவுக்கு ஆஃபர்களையும், நெட்வொர்க்கையும் ஏர்டெல், வோடோபோன் கொடுக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி.
ஆனால் வேண்டவே வேண்டாம் என போர்ட்டபிலிட்டி வரை வாடிக்கையாளர்கள் செல்லலாம். ஆனால் அதற்கான வழிமுறைகளையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சற்று சுத்தலிலேயே விடுகின்றன.
அடுத்து இதுவா?
எஸ் எம் எஸ் அனுப்பவதற்கு இப்போது மினிமம் ரீசார்ஜ் கொண்டுவந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்து எஸ் எம் எஸ் வர வேண்டுமென்றாலே மினிமம் ரீசார்ஜ் என்ற திட்டத்தை கொண்டு வரலாம். அனைத்துக்கும் ஓடிபிஐ நம்பி இருக்கும் நமக்கு வேறு வழியும் இல்லை என்பதுதான் அதற்கான காரணமாக அவர்களுக்கு இருக்கும்.
தங்களை நம்பித்தானே இருக்கிறார்கள், நாம் வைப்பதுதான் சட்டமெனவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கால்போன போக்குக்கு போக முடியாது என்கின்றனர் சிலர். எந்த நிறுவனமாக இருந்தாலும் அது அரசாங்கத்தின் பார்வையிலேயே இருக்கின்றன. மக்களை பாதிக்கும் எந்த ஒரு சின்ன விஷயத்திலும் அரசு தலையிடும் என்பதையும் வாடிக்கையாளர்கள் நம்பியே இருக்கிறார்கள்.