ஈ.வெ.ரா. பெரியாரின் 143 வது பிறந்த தினம் நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி ஒழிப்பிற்காகவும், பெண் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர் பெரியார். அதனால் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டுமின்றி பலரும் பெரியாரை கொண்டாடி வருகின்றனர். அதிலும் பெண் விடுதலைக்காக பெரியார் பேசிய பேச்சுகளும், கருத்துகளும் அதிர்வலைகளை ஏற்படுத்துபவை. இன்றளவும் பேசத் தயங்கும் கருத்துகளை நூறாண்டுகளுக்கு முன்பே பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கும் இருக்கிறது என்று பெண்ணுரிமை பேசியவர். உடன்கட்டை, பெண் கல்வி மறுப்பு, வேலைக்குச் செல்லத் தடை, சொத்துரிமை இல்லாமை, தேவதாசி முறை போன்ற பெண்ணுக்கு எதிரான சமூக அவலங்களை ஒழிக்கக் குரல் கொடுத்தவர்.
அதிலும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகம் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகளை வெளிக்காட்டும் வகையில் வெளிவந்து, இன்றளவும் அதிகளவில் படிக்கப்பட்டும், விற்பனையாகியும் வருகிறது. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் தேவையை தன்னகத்தே கொண்டுள்ளது. 1926 ம் ஆண்டு முதல் 1931 ம் ஆண்டு வரை ’குடி அரசு’ இதழில், பெண்ணிய சிந்தனைகள் தொடர்பாக பெரியார் எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பு தான், ’பெண் ஏன் அடிமையானாள்?’. 1933 ம் ஆண்டில் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் இந்த புத்தகத்தை வெளியிட்டது. கற்பு, வள்ளுவரும் கற்பும், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத் தடை, பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் ஆகிய 10 கட்டுரைகளை கொண்டது அப்புத்தகம்.
தொடர்ச்சியாக விற்பனையில் ’பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பாரதி புத்தகாலயம், எதிர் வெளியீடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் இப்புத்தகத்தை பதிப்பித்து வருகின்றன. மக்களிடம் பரவலாக்கும் வகையில் நன்செய் பதிப்பகம் மலிவு விலையில் இப்புத்தகத்தை வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ’பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகங்கள் விற்பனை செய்துள்ள நன்செய் பிரசுரம், பெரியார் பிறந்த நாளில் ஒரு இலட்சம் பிரதிகளை விற்பனை செய்துள்ளது.
இது குறித்து நன்செய் பதிப்பகத்தின் கவிஞர் தம்பியிடம் கேட்ட போது, “பாலின சமத்துவம் குறித்து கருத்து பிரச்சாரம் செய்யும் வகையிலும், இளைய தலைமுறையினரிடம் பெரியாரின் கருத்துகளை பரப்பும் நோக்கிலும் ’பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை 10 ரூபாய் என்ற மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறோம். 2018 ம் ஆண்டில் துவங்கிய இம்முயற்சியில், 100 நாளில் ஒரு இலட்சம் புத்தகங்கள் விற்பனையாகின. அதன்பின் சென்னை புத்தக கண்காட்சியிலும் ஒரு இலட்சம் புத்தகங்கள் விற்பனையாகின.
ஒரே நாளில் ஒரு இலட்சம் புத்தகம் என்ற நோக்கில், முன்பதிவு முறையில் விற்பனை செய்ய ஜூலை 17-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டோம். செப்டம்பர் 5-ஆம் தேதியே இலக்கை எட்டினோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், ஒரு இலட்சத்து 18 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்ததாக மகளிர் தினத்தில் 10 இலட்சம் புத்தகங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இளைய சமுதாயத்தினரிடம் பெரியார் மீது மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது. பெரியார் இன்றும் பேசுபொருளாக உள்ளார். பலர் பெரியாரை தேடித்தேடி படிக்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் பெரியாரை படிக்கின்றனர். பெரியாரின் புத்தகங்களில் ’பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் விடுதலைக்காக காலத்தை தாண்டி சிந்தித்துள்ளார். உலகளவில் பெண் விடுதலைக்காக போற்றப்படும் ‘The second sex’ என்ற புத்தகத்தில் பேசப்பட்ட கருத்துக்களை, அப்புத்தகம் வெளிவருவதற்கு 20 ஆண்டுகள் முன்பே பெரியார் பேசியுள்ளார். பெண்களுக்காக பெண்களே பேசாத விஷயங்களை, ஆணாக இருந்தாலும் பெரியார் பேசினார். பெண்களுக்கு மிக நெருக்கமான புத்தகமாக இப்புத்தகம் இருப்பதால், பெண்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். பெரியார் எக்காலத்திற்கும் தேவையானவர்” என அவர் தெரிவித்தார்.