தங்கள் நாட்டிற்கு எதிரான கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து கடைசி நேரத்தில் ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோபமாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை பாகிஸ்தான் பாதுகாப்புடன் நடத்தியது. போட்டி நடத்துவது தொடர்பாக, பிரதமர் இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து தலைமையிடம் பேசினார். அதுமட்டுமில்லாமல் உறுதியும் அளித்தார். ஆனால், அதனை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். இன்றைய அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று. அது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், நியூசிலாந்து பின்வரும் புள்ளிகளை நினைவில் கொள்ள வேண்டும் என பதிவிட்ட அக்தர், கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் 9 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, நியூசிலாந்துடன் பாகிஸ்தான் வலுவாக நின்றது. மிக மோசமான கொரோனா சூழ்நிலைகளில் நியூசிலாந்தில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்க நியூசிலாந்து அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடத்தியதை பொருட்படுத்தாமல் விளையாடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. இந்நிலையில், இன்று தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2003-ம் ஆண்டை அடுத்து, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அளித்துள்ளது. “பாதுகாப்பு காரணங்களுக்காக” என சுட்டிக்காட்டி தொடரில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு, மைதானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையொட்டி, வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ரூம்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட்டைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், குண்டு வைத்திருப்பது தொடர்பான தகவல் போலியான செய்தி என உறுதி செய்யப்பட்டது.
பாக்., மைதானத்தில் வெடிகுண்டு: டாஸ் போடுவதை ரத்து செய்து நாடு திரும்பும் நியூசி!