இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 36 செயற்கைக்கோள்களுடன் அதன் அதிகனமான ராக்கெட்டான   ‘எல்விஎம் 3’ ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது.


ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (அக்.23) நள்ளிரவு 12:07 மணிக்கு   ‘எல்விஎம் 3’ விண்ணில் செலுத்தப்பட்டது.






’எல்விஎம் 3’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக முன்னதாக இஸ்ரோவுக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும்,  உலகளாவிய வணிக செயற்கைக்கோள்கள் வெளியீட்டு சேவை சந்தையில் இந்தியாவின் போட்டியிடும் பாங்கை இந்த முயற்சி மேம்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.






நேற்று (அக்.22) காலை,  திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ செங்கலம்மா பரமேஸ்வரி தேவி கோயிலில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த வேண்டி  இஸ்ரோ தலைவர் சோமநாத் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினார்.


அப்போது பேசிய அவர், “இஸ்ரோவின் ராக்கெட்  ‘எல்விஎம் 3’ தனியார் தகவல் தொடர்பு நிறுவனமான OneWeb இன் 36 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.


பிரிட்டனுடன் இணைந்து 108 செயற்கைக்கோள்களை ஏவும் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது. 


இந்த முப்பத்தாறு செயற்கைக்கோள்கள் முற்றிலும் தகவல் தொடர்புக்காக மட்டுமே ஏவப்படுகின்றன. பிஎஸ்எல்வி மற்றும் எஸ்எல்வி ராக்கெட்டுகள் குறித்த சோதனை இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


எல்.வி.எம். - 3 என்ற பெயர் மாற்றம் எதற்கு?



ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற பெயரில் இருந்து ’எல்.வி.எம். 3’ என்ற பெயர் மாற்றத்திற்கு இஸ்ரோ காரணம் தெரிவித்துள்ளது. இந்தத் தொலைத்தொடர்பு செயற்கைக்கொள்கள் புவியின் ஜியோசின்க்ரோனஸ் ஆர்பிட்டில் (geosynchronous orbit) நிலைநிறுத்தப்படாது. 


ஒன்வெப் செயற்கைக்கோள்கள் 1,200 கிலோமீட்டர் உயரத்தில் புவியின் தாழ்வான வட்டப்பாதையில் (LEO- Low Earth Orbit) இயங்கும். இதனை அடையாளமிட ஏதுவாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.