இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 


மோசமான பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டியும்  பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரியும் அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் உச்சகட்டமாக, கடந்த ஜூலை மாதம், இலங்கை அதிபராக பொறுப்பு வகித்த கோட்டபய ராஜபக்ச அந்நாட்டிலிருந்தே வெளியேறினார்.


இதன் எதிரொலியாகதான் தற்போது அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 179 ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்தனர். இலங்கையை பொறுத்தவரை, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.






இந்த சட்ட திருத்தத்தின் மூலம், அலுவலர்களை நியமிப்பது உள்பட அதிபரின் சில அதிகாரங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் மதிப்புமிக்க தலைவர்கள் அடங்கிய அரசியலமைப்பு சபைக்கு மாற்றப்படுகிறது.


மூத்த நீதிபதிகள், அரசின் தலைமை வழக்கறிஞர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், காவல்துறை, தேர்தல் ஆணையர்கள் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை அலுவலர்கள் போன்ற பதவிகளுக்கு அரசியலமைப்பு சபைதான் பரிந்துரைக்கும். அமைச்சரவை நியமனங்களை பரிந்துரைக்கும் அதிகாரம் பிரதமருக்கு அளிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்புத்துறையை தவிர வேறு எந்த அமைச்சரவைப் பதவிகளையும் அதிபரால் இனி வகிக்க முடியாது. கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜனநாயக சீர்திருத்தங்கள், 2019ஆம் ஆண்டு ராஜபக்சவால் நீக்கப்பட்டன. தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் அந்த சீர்திருத்தங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன.


நீதித்துறை மற்றும் குடிமை சேவைகளின் சுதந்திரத்தை இது உறுதிப்படுத்த உதவும் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் உயர்ந்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலையை கட்டுபடுத்த இலங்கை அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது. விலையை குறைத்தன் காரணமாக நிதி சிக்கலில் இலங்கை சிக்கியது.


இதன் காரணமாகவே, இந்தாண்டு இலங்கையில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தநாள் வரை, போராட்டம் தொடர்ந்தாலும் அது சிறிய அளவிலேயே நடத்தப்பட்டு வருகிறது.