உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் OYO ஹோட்டல்களின் அறைகளில் தம்பதிகள் தனியாக இருக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் நோக்கில் யாரும் கண்டறிய முடியாத கேமராக்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.


OYO ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்த ஒரு கும்பல் யாரும் கண்டறிய முடியாத கேமராக்களை வைத்திருந்து விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியதாவது:
OYO ஹோட்டல்களில் மர்ம கும்பல் அறைகளை முன்பதிவு செய்து, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் கேமராக்களை பொருத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். பின்னர், அங்கு வாடகைக்கு அறை எடுத்துத்தங்கும் தம்பதிகள் ஒன்றாக இருப்பதை அந்தக் கேமராக்கள் பதிவு செய்கிறது.


பின்னர் மீண்டும் அதே அறைக்கு வந்து தங்கும் மர்ம கும்பல் அந்த வீடியோக்களை எடுத்து, அங்கு தங்கியிருந்த தம்பதிகளின் செல்போன் எண்ணை எடுத்து, அவர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி மிரட்டி வந்தனர். அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கத் தவறும் பட்சத்தில் அந்த வீடியோவை ஆன்லைனில் அப்லோடு செய்துவிடுவோம் என்று அந்த மர்ம கும்பல் மிரட்டியிருக்கிறது. இதுதொடர்பாக விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார், அனுராக் குமார் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மூன்று வெவ்வேறு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கும்பல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.


Gujarat : ஒரு வாரத்திற்கு எந்த அபராதமும் கிடையாது...! குஷியில் குஜராத் வாகன ஓட்டிகள்..! தீபாவளி பரிசா..? தேர்தல் வியூகமா..?


அவர்களிடம் இருந்து 11 மடிக்கணினிகள், 7 சிபியூக்கள், 21 மொபைல்கள், பல்வேறு வங்கிகளின் 22 ஏடிஎம் கார்டுகள், ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் கார்டு, ஏராளமான போலி ஆவணங்கள், ஐ கார்டு, சிம்கார்டு ஆகியவை மீட்கப்பட்டன. அவரது கூட்டாளிகளில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு தொடர்பு இல்லை. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.


இதுதொடர்பாக OYO நிர்வாகம் இதுவரை எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.