கடந்த 2 வாரங்களாக டெய்லி மெயில், தி ஸ்டார், சேனல் நியூஸ் ஏசியா, போர்ப்ஸ், நெர்டிஸ்ட், ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், டுடே யுகே நியூஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் குருநாதன் தங்கவேல். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் தனது குழுவினருடன் இணைந்து நிகழ்த்திய கண்டுபிடிப்பு சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இன்றைய காலத்தில் மின்சாரமும், ஏரிபொருளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எரிபொருள் விலையேற்றத்தால் வாகனங்களை இயக்கக்கூட மின்சாரத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.


இத்தகைய சூழலில் காற்று, நீர், அணு, நிலக்கரியை தவிர்த்து வேறு எந்தெந்த வகைகளில் எல்லாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்ற ஆய்வு உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதில், ஒரு புதிய மைல் கல்லை எடுத்து வைத்திருக்கிறது குருநாதன் தங்கவேல், லீ பூய், லியூ ஜியான் ஆகியோரின் மூவர் குழு. மனித வியர்வையிலிருந்து சார்ஜ் ஆகும் பேட்டரியை கண்டிபிடித்து வெற்றிகரமாக இயக்கி காட்டி இருக்கின்றனர் இம்மூவரும்.



இது குறித்து நமது ஏபிபி நாடு செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு விஞ்ஞானி குருநாதன் தங்கவேலு அளித்த பதில்கள்...


செய்தியாளர்: முதலில் உங்களை பற்றிய அறிமுகத்தை சொல்லுங்க... பிறந்தது, படித்தது எங்கே? பெற்றோர் என்ன செய்கின்றனர்?


என் பெயர் குருநாதன் தங்கவேல், வயது 36, கடந்த நான்கு வருடங்களாக NTU, சிங்கப்பூரில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். கரூர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு பிறந்தேன். அம்மா அப்பா இருவருமே 5-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. என்னை பல கஷ்டங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். இன்னும், என் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். என் அப்பா இயற்கை வாழ்வியக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இயற்கையைச் சீண்டாமல் அதனுடன் வாழவேண்டும் என அவர் அடிக்கடி சொல்வதுண்டு.


நான்  சிறுவயதில் இருந்தே விஞ்ஞானி ஆக வேண்டும் என விரும்பினார். 10-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் தான் படித்தேன்.  திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்து, பிஷப் ஹீபர் கல்லூரியில் வேதியல் துறையில் இளங்கலை (B.Sc) மற்றும் முதுகலை (M.Sc) பட்டங்களை பெற்றேன்.


ஆராய்ச்சித்துறை மீது உள்ள ஈடுபாட்டின் காரணமாக, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ரசாயனத்துறையில் முதுநிலை பொறியியல் பட்டமும், அதே துறையில் டாக்டர் படத்தையும் பெற்றேன். உடனே தென் கொரியாவில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணி கிடைத்தது. 30க்கும் மேற்பட்ட சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகை கட்டுரைகள், புத்தக அத்தியாயங்களை எழுதியுள்ளேன். 2020 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற டிஎம்எஸ் 2020 மாநாட்டில் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பத்துக்கான விருது பெற்றுள்ளேன்.


செய்தியாளர்: இந்த துறையை எதற்கு தேர்வு செய்தீர்கள்?


நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள வேதியியல் உதவுகிறது. இலையுதிர்காலத்தில் இலைகள் ஏன் நிறத்தை மாற்றுகின்றன? தாவரங்கள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன? சீஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது? சோப்பில் என்ன இருக்கிறது? இவை அனைத்துக்கும் வேதியியல் பதில் தருகிறது. வேதியியல் என்பது பொருள் மற்றும் ஆற்றலுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு ஆகும். வேதியியல் நம்பமுடியாத கவர்ச்சிகரமான ஆய்வுத் துறை.


வேதியியல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பங்கு வகிக்கிறது. உணவு, உடை, தங்குமிடம், ஆரோக்கியம், ஆற்றல், சுத்தமான காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேதியியல் அவசியம். ஆரோக்கியம், பொருள் மற்றும் ஆற்றலை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு புதிய தீர்வுகளை வழங்குவதன் மூலம் இரசாயன தொழில்நுட்பம் பல வழிகளில் நமது வாழ்க்கைத் தரத்தை வளமாக்குகின்றன. இவ்வாறு, வேதியியல் படிப்பது உண்மையான உலகத்திற்கு நம்மை தயார்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். நல்லதோ.. கெட்டதோ… அனைத்தும் இரசாயனமே!


செய்தியாளர்: 3 பேர் கொண்ட உங்கள் குழுவில் இந்த யோசனை முதலில் யாருக்கு தோன்றியது? இந்த திட்டத்தில் உங்களின் பங்களிப்பு என்ன?


இதில் முவரும் சரிசமாக பங்காற்றியுள்ளோம். மூவரின் பங்களிப்பும் இன்றியமையாதது, ஆசிட்டையும் மையையும் உருவாக்குவது என்னுடைய பனி. இந்த ஆசிட் மற்றும் மைய்யில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ரசாயனமும் இல்லை.


செய்தியாளர்: வியர்வையின் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரியை உருவாக்கலாம் என்ற யோசனை எங்கிருந்து பிறந்தது?


உடற்பயிற்சிபோதும், கோடையிலும் அதிக வியர்வை வழக்கத்தை விட வெளியேறுவதை காணமுடியும். வியர்வையின் வழியாக எலக்ட்ரோலைட்டுகள் என்று சொல்லக்கூடிய மின்பகுபொருள் மற்றும்  சோடியம் போன்றவையும் வெளியேறும். இந்த மின்பகுபொருள் தான் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்துகிறது.


பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை மின்பகுபொருள்களில் உள்ளடங்கி இருக்கும். இதை நாம் ஏன் பேட்டரிகளை சார்ஜ் செய்ய பயன்படுத்த கூடாது என்று எண்ணினோம். அதன் தொடர்ச்சியாகவே, மனித வியர்வையால் இயங்கக்கூடிய மின்கலனை (பேட்டரி) கண்டறித்தோம்.


செய்தியாளர்: பேட்டரியை சார்ஜ் செய்யும் அளவுக்கு வியர்வையில் அப்படி என்ன இருக்கிறது?


நமது உடலில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் இயங்குகின்றன. ஒன்று, உடல் முழுவதும் இருக்கும் வியர்வை சுரப்பிகள் (ஏக்ரைன்) வியர்வை மட்டும் சுரக்கும். மற்றொன்று தலை, அக்குள், மர்ம உறுப்புகள் போன்ற இடங்களில் மட்டும் சுரக்கும் (‘அப்போகிரைன்). இந்த வியர்வை சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகளுடன் சேர்ந்து மயிர்கால் வழியாக வியர்வையை சுரக்கும்.



நம் உடலில் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள வியர்வை பணியாற்றுகிறது. மேலும் உடலில் ஏற்படும் கழிவு பொருட்களை சிறுநீரகத்திற்கு தோழனாக நின்று வெளியேற்றுகிறது. வியர்வை வழியாக தாது உப்புகள், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படும்.  வியர்வை வெயிலில் காயும்போது வெண்மையாக உப்பு படர்வதை அனைவரும் உணரலாம். இதில் தாது உப்புக்களான, பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளடங்கி இருக்கும்.  இந்த தாது உப்புக்களுக்கு ஒரு பேட்டரியை இயக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது.


செய்தியாளர்: தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். இந்த பேட்டரியை உருவாக்குவதற்கான தேவை என்ன?


தற்போது ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது வியர்வையால் இயங்கும் பேட்டரி மற்றும் அதன் நன்மைகள் ஏராளம். உடலின் வெளிப்புறத்தில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்சுகள், கைக்கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்களில் சுற்றுசுழலுக்கு மாசு விளைவிக்கும் கடினமான பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.


இதனால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. அதுமட்டுமின்றி தற்போதைய பேட்டரிகளில் எலக்ரோலைட் என்று சொல்லக்கூடிய அபாயகரமான ராசயங்கள் உள்ளன. இதனால் பாதுகாப்பு இல்லை.  எனவேதான் துணியால் ஆன பேட்டரியை நாம் உருவாக்கி உள்ளோம். இதில் பயன்படுத்தப்படும் பொருளில் எந்த தீமையும் சுற்றுசுளுக்கோ அல்லது மனித உடம்புக்கோ ஏற்படாது.


இரண்டாம் பாகம் நாளை தொடரும்...