உலகம் முழுவதும் அதிக பேர் மூழ்கி இருக்கும் முக்கியமான சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் பலரையும் அடிமையாக்கி உள்ளது. முதலில் புகைப்படங்களை பகிறும் சமூக வலைதளமாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராமை பேஸ்புக் விலைக்கு வாங்கியது. அதன் பின்னர் பல அப்டேட்களை கொண்டுவந்தது அந்நிறுவனம். குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட நிலையில் வீடியோக்களில் கவனத்தை திருப்பியது இன்ஸ்டா. 


ரீல்ஸ், IGTV என வீடியோக்களின் மூலம் தன் பக்கம் கூட்டத்தை இழுத்தது இன்ஸ்டா. அதில் நல்ல வருமானத்தையும், அசுர வளர்ச்சியையும் அடைந்தது. இந்நிலையில் வரும் 2022ல் வீடியோவில் தான் அதிக கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளதாம் இன்ஸ்டா. இது குறித்து தெரிவித்துள்ள இன்ஸ்டா தலைமை, உலகம் போகும் வேகத்துக்கு நாங்களும் செல்ல  யோசிக்கிறோம். அதிவேகமாக உலகம் மாறுகிறது. அதற்கேற்ப நாமும் மாற வேண்டும்.  நாங்கள் வீடியோவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். வெறும் போட்டோ ஷேர் செய்யும் செயலியாகவே இருக்காமல் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார். 




ரீல்ஸ், ஐஜிடிவி போன்ற வீடியோக்களின் நீள அளவை தற்போது இன்ஸ்டா அதிகரித்துள்ளது. 60 நொடிகள் ஓடும் வீடியோவை தற்போது பயனர்கள் அப்லோட் செய்யலாம். இந்த நிலையில் மேலும் வீடியோக்களில் பல திட்டங்களை வரும் ஆண்டில் இன்ஸ்டா கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது. இதனால் இனி உங்களது இன்ஸ்டாவில் வீடியோ நிரம்பி வழியலாம் எனக் கூறப்படுகிறது. 


முன்னதாக 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய வசதி வரவுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அந்நிறுவனம்''எங்களுடைய தளத்தை இளம் வயதினர் குறிப்பாக விடலை பருவத்தில் உள்ளவர்கள் சில பதிவுகளை அதிமாக பார்த்து வருகின்றனர். அது அவர்களுடைய மனதில் தவறான எண்ணத்தை விளைவிக்க கூடும்.  ஆகவே இதை நாங்கள் தடுக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளோம். அதேபோல் பள்ளி பருவத்தில் இருக்கும் நபர்கள் எங்களுடைய தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கும் வகையில் டேக் அ பிரேக் என்ற வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளோம்” எனக் குறிப்பிட்டது