பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அது தனிப்பட்ட மனிதரின் கருத்து என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.



திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு


தந்தி தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்துள்ள டி.ஆர்.பாலு, பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக நெறியாளர் அசோகவர்த்தினி கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.


நெறியாளர் : திமுக தேர்தல் வாக்குறுதிபடி ஏன் டீசல் விலையை குறைக்கவில்லை..?


டி.ஆர்.பாலு : ஏன், மத்திய அரசு இன்னும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவில்லை ?


நெறியாளர் : ஜி.எஸ்.டிக்குள்ள கொண்டு வந்துடலாமா ?


டி.ஆர்.பாலு : எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி போட்றாங்க, சாப்டுற பொருள், வாங்குற மளிகை சாமன் அப்டின்னு எல்லாவற்றுக்கும் போட்றாங்க. ஏன் பெட்ரோல், டீசலுக்கு போடல ?


நெறியாளர் : ஏனென்றால், தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.


டி.ஆர்.பாலு : அவரு எதிர்க்குறாரு, இவர் எதிர்க்குறாருன்னு சொல்லாதீங்க.


நெறியாளர் : அவர் தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர்


டி.ஆர்.பாலு : அவர் அவரோட வேலையை பார்க்கிறார். நான் திமுகவின் பொருளாளர் என்ற அடிப்படையில் பேசுகிறேன். நான் கேட்கிற கேள்வி, ஜி.எஸ்.டி வரம்பிற்குள் ஏன் பெட்ரோல், டீசலை மத்திய அரசு கொண்டுவரவில்லை ?


இப்ப வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கிறார் என்பதற்காக இல்லை. அவர் அமைச்சர் ஆவதற்கு முன்னதாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுவிட்டதுதானே ?


நெறியாளர் : சரிசார், தியாகராஜன் சொன்னதையே விட்ருவோம். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு ஒப்புதலா ?


டி.ஆர். பாலு : திமுக தேர்தல் அறிக்கை பாருங்க, அதுலயே நாங்க சொல்லியிருக்கோம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.


நெறியாளர் : பின்னர்  ஏன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கிறார் ?


டி.ஆர்.பாலு : நிதி அமைச்சரா.. ஒரு தனி மனிதனர (Individual ஐ) பத்தி பேசிறீங்க, என்னம்மா நீங்க ?


நெறியாளர் : சார்.., அவர் தமிழ்நாட்டோட நிதி அமைச்சர், அவர் தனிமனிதர் கிடையாது. அவர்தான் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியா ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு போறாரு.


டி.ஆர். பாலு : இதையெல்லாம் சட்டமன்றத்துல கேளுங்க, பொதுமன்றத்துல கேட்கும்போது என்னோட கருத்ததான் சொல்லமுடியும். நான் தான் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லித் தான் அந்த வாக்குறுதிகளை எல்லாம் எழுதினேன்.


நெறியாளர் : அப்போ, ஜி.எஸ்.டி வரம்புக்குள்ள பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவரவேண்டும் என்று மத்திய அரச வலியுறுத்றீங்க ?


டி.ஆர். பாலு : இத எல்லா மாநிலங்களும் ஒத்துக்கொண்டால், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் ஒத்துக்கொள்வார். என பேசியிருப்பார்.



பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்


மாநிலத்தின் நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தனி மனிதர் என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளதும், பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரச் சொல்லி கட்டளையிட்டு அறிக்கை தயாரிக்க சொன்னது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று அவர் பேசியதும் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றனர்.



எடப்பாடி கே பழனிசாமி


கட்சி ஒரு நிலைபாடும், அரசு ஒரு நிலைபாடும் எடுத்துள்ளதா என்று அவர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி, இந்த நேர்காணலில் டி.ஆர்.பாலு பேசியதை குறிப்பிட்டும், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை பேசியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டியும் உள்ளார். அதோடு, தேர்தல் சமயத்தில்  திமுக அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது என்பதை முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.