இண்டெர்நெட் பயன்பாடு அதிகமுள்ள நிலையில் பலரும் வீடீயோ பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். எந்த செயலி வெளியானாலும் அதில் வீடீயோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் யூடியூப் மட்டுமே வீடியோவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் டிக் டாக், இன்ஸ்டா, பேஸ்புக் ஆகிய செயலிகள் வீடியோ பக்கம் ஒதுங்கின.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிரம் போட்டோக்களை பகிரும் செயலியாக முதலில் சந்தைக்கு வந்தது. ஆனால் தற்போது ரீல்ஸ், IG Tv என வீடியோவுக்கான செயலியாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனிடையே முழுமையாக வீடியோவில் மட்டும் கவனம் செலுத்த இன்ஸ்டா முடிவெடுத்துள்ளது. இனிமேல் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மட்டுமே பகிர முடியும். போட்டோக்களை ஷேர் செய்யும் வசதி நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்ஸ்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நான்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கிறோம். கிரியேட்டர்கள், வீடியோ, ஷாப்பிங், மெசேஜிங் ஆகிய பிரிவுகளில் பயனாளர்களுக்கு தேவையான வித்தியாசமான அனுபவத்தை தர உள்ளோம். வீடியோவை பொருத்தவரை பார்க்கும் அனுபவத்தை வித்தியாசமாக தர முயன்று வருகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்” என கூறியுள்ளது.
”நாங்கள் போட்டோ பகிரும் ஒரு தளமாக இருந்த காலம் மலையேறி விட்டது, அதே நேரத்தில் வீடியோவுக்கான போட்டி என்பது அதிகம்,டிக் டாக், யூடியூப் போன்ற கடும் போட்டியாளர்களும் இன்னும் சில வீடியோ தளங்களும் போட்டியை அதிகப்படுத்துகின்றன. இன்ஸ்டாவை ஒரு பொழுதுபோக்கு தளமாகவே மக்கள் பார்க்கின்றனர், அதனால் போட்டியும் கடுமையாகவே உள்ளது. எனவே மாற்றங்களை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது” என அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார்.