விழுப்புரம் நகரில் வசித்துவரும் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அரியவகை மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலைமுடியை சாப்பிட்டுள்ளார். சுமார் 1 கிலோ எடை கொண்ட முடியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் ராஜமகேந்திரன் அகற்றியுள்ளார். விழுப்புரம் நகரில் வசிக்கும் பணிக்கு செல்லும் ஒரு பெற்றோரின் 15 வயது மகள், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வந்துள்ளார். பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் தன் பாட்டியுடன் வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி, வாந்தி என, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை மேற்கொண்டபோது, வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.




இதனைத் தொடர்ந்து, மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து அச்சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர் .இது குறித்து, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜமகேந்திரன் கூறுகையில், "குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது நண்பர்களுடன் உரையாடிவிட்டு வீட்டுக்கு உற்சாகமாக வருவார்கள். ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் கற்றுவருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆன்லைனில் படிக்கும் மாணவ, மாணவிகளை வீட்டில் இருப்பவர்கள் கண்காணிக்க வேண்டும்.




மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு வயிற்று வலி, வாந்தி, மேலும் சாப்பிட முடியவில்லை என்று பெற்றோர் கூறினர். அதன் பின் அச்சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தும், எண்டோஸ்கோப் மூலம் பார்த்தபோது வயிற்றில் முடிகளால் ஆன கட்டி இருப்பதை உறுதி செய்தோம். ஆன்லைன் வகுப்பால் அச்சிறுமிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, தன் தலையில் உள்ள முடிகளை பிய்த்து சாப்பிட்டுள்ளார். இதனால் முடிகளால் ஆன கட்டி ஏற்பட்டுள்ளது. வயிற்றில் கட்டி வந்துள்ளது. வயிற்று வலியோடு வந்த பலருக்கு கட்டி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், முடிகளால் ஆன கட்டி என்பது இப்போது தான் நான் பார்க்கிறேன். இக்கட்டி சிறுகுடல் வரை பரவியுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு காரணம் குழந்தை அல்ல. குழந்தையை கவனிக்காத பெற்றோர்தான். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுப்பதைப் போல இக்கட்டியை அகற்றியுள்ளோம்.




இதனை Rapunzel Syndrome என்று கூறுவார்கள். உலக அளவில் 60 பேருக்கு இப்படிப்பட்ட கட்டிகள் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது. தற்போது அச்சிறுமிக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது என்றார். இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.