பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப்புக்கு பிறகு உலகளவில் அதிகம் பிரபலமான சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இதுகுறித்து பலரும் அறிந்திராத நேரத்திலேயே "இன்ஸ்டாகிராமத்தில் வாடி வாழலாம்" என தளபதி பாடிய மறுநொடியே அதில் வெறித்தனமாக கணக்கு தொடங்கி கெத்து காட்டினர் விஜய் ரசிகர்கள்.
புகைப்பட கலைஞர்கள், பிரியர்களை ஈர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட இன்ஸ்டாகிராமில் தரமான புகைப்படங்களுக்கு கேரண்டி. ஏராளமான பில்டர்களையும் வசதிகளையும் கொடுத்து புகைப்பட பிரியர்களை தன் வசப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.
இதை பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் வாங்கிய பிறகு வேற லெவல் ஹிட் ஆனது. 80ஸ் கிட்ஸ்களுக்கு 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு பேஸ்புக் போல், இப்போது உள்ள 2K கிட்ஸ்களுக்கு இன்ஸ்டாகிராம் தான் ஆஸ்தான சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது இதை பயன்படுத்தி வருபவர்கள் எண்ணிக்கை 1.214 பில்லியன். அதாவது 121 கோடி. இந்த அளவுக்கு பிரபலமான இன்ஸ்டாகிராமில் பிராப்ளங்களும் அதிகம். ஆம், நிதி மோசடி தொடங்கி பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் வரை ஏராளமான குற்றங்கள் இன்ஸ்டாகிராமத்தில் நடக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்ட ரீல்ஸ் என்ற வீடியோ வசதி மூலம், INFLUENCERS என கூறிக்கொள்ளும் பலர் போலியான, தரமற்ற நிறுவனங்களை, பொருட்களை விளம்பரம் செய்வது வருகின்றனர்.
அதுபோல் டிக்டாக் மூலம் அரங்கேறிய அனைத்து குற்றங்களும், இன்ஸ்டாகிராமத்துக்கு ரீல்ஸ் வழியாக வந்தடைய தொடங்கி இருக்கிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் ஆபாச வீடியோக்களை சிறுவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் தான் இளம் வயது பயனர்களின் பாதுகாப்பு கருதி, பிறந்தநாள் கேட்கத் தொடங்கி இருக்கிறது இன்ஸ்டாகிராமத்தை 2019-ம் ஆண்டு புதிதாக கணக்கும் தொடங்கும்போதே பிறந்தநாளை கேட்கத் தொடங்கிய இன்ஸ்டாகிராம் தற்போது, பழைய பயனர்களிடம் அந்த தகவலை கோரி வருகிறது. உங்களில் பலர் இன்று இன்ஸ்டாகிராமை ஓபன் செய்யும்போதே ADD YOUR BIRTHDAY என கேட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
அதில் NOT NOW என்பதை அழுத்தி பிறந்தநாளை இணைக்காமல் பயன்படுத்தலாம். ஆனால், இந்தநிலையை அப்படியே தொடர முடியாது என இன்ஸ்டாகிராம் தெரிவித்து உள்ளது. இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்த பிறந்தநாளை கட்டாயம் இணைக்க வேண்டும் என அதன் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பிறந்தநாளை குறிப்பிடாதவர்களுக்கு பல பதிவுகள், படங்கள் மங்கலாக மறைக்கப்பட்டு சென்சிட்டிவ் என காட்டப்படும் என இன்ஸ்டாகிராம் கூறி இருக்கிறது.
இதன் மூலம் இளம் வயது பயனர்களின் பாதுகாப்பு மேம்படும் என இன்ஸ்டாகிராம் நம்புகிறது. வயது விசயத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வரும் இன்ஸ்டாகிராம் 21 வயதுக்கு குறைவானர்களுக்கு மதுபானம் தொடர்பான விளம்பரங்களை காட்டுவதில்லை. அதுபோல், 16 வயதுக்கு குறைவான சிறுவர்களின் கணக்குகளை பப்ளிக் கணக்காக மாற்ற முடியாது. பெரியவர்கள் அவர்களுக்கு நேரடி மெசேஜ் அனுப்பவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.