ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் பீஸ் ஸ்டூடியோ என்ற தொலைக்காட்சி பார்டாஸ் என்ற பெயரில் தலிபான்களுடன் அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளது. அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றிய சில நாட்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதில், பேசியுள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர் அமெரிக்க ஆதரவு அரசின் அதிபர் அஷ்ரப் கானியின் ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து தெரிவித்துவிட்டு, தலிபான் தலைமையிலான அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அச்சம் வேண்டாம் என குறிப்பிடுகிறார்.
தலிபான்கள் பலரால் சூழப்பட்டு இருந்த நிகழ்ச்சி மேடையில், அவர்கள் ஆட்சியில் யாரும் அஞ்ச வேண்டாம் என பேசும் நிகழ்ச்சி தொகுப்பாளரின் முகத்திலேயே அச்சம் வெளிப்பட்டது. அவரது பின்னால் இரண்டு தலிபான் வீரர்கள் ஆயுதங்களுடன் நிற்கின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும் ஆப்கானிஸ்தானில் நிலவும் ஊடக சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து பிபிசி செய்தியாளர் கியான் ஷரீஃபி, தாலிபான்கள் பீஸ் ஸ்டூடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளரை கட்டாயப்படுத்தி பேச வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். தலிபான்கள் தொலைக்காட்சி நிறுவனத்தை கட்டாயப்படுத்தி அந்த நிகழ்ச்சியை நடத்த வைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த டோலோ நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜியா கான் யாத்தை தலிபான்கள் கொலை செய்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜியா கான் யாத், தான் கொல்லப்படவில்லை என்றும், கேமராமேனுடன் செய்தி சேகரிக்க சென்றபோது தாலிபான்கள் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு தலைநகர் காபுலை கைப்பற்றிய தலிபான்கள் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தபோது, பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். ஊடகங்கள் நடுநிலையாக செய்தி வெளியிட வேண்டும். தங்களையும் விமர்சித்து செய்தி வெளியிட உரிமை அளிப்பதாக உறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கவிழ்த்து தங்களுக்கு ஆதரவான அரசை நிறுவிய அமெரிக்க அங்கு தங்கள் நாட்டு படைகளை குவித்தது. 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டு இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த 15 நாட்களுக்கு முன் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து தலிபான்கள் ஒவ்வொரு நகரமாக முன்னேறி கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அமெரிக்கப் படைகளையும் திரும்பப் பெற செவ்வாய்க்கிழமை இறுதிக்கெடு விதித்த நிலையில், நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி அமெரிக்க வீரரும் நாடு திரும்பினர்.