பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான சொயிப் மாலிக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். 2021-ம் ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பல நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் சொயிப் மாலிக் விளையாடி வருகிறார்.


இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி வார்னர் பார்க்கில் நடைபெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சொயிப் மாலிக் பேட்டிங் செய்தபோது பதிவான வீடியோ வைரலாகி வருகிறது.


அப்படி என்ன அவர் சாதித்துவிட்டார் என யோசிக்க வேண்டாம். வைரலாவது அவரது பேட் அல்ல… காலணி. சொயிப் மாலிக் எதிரணி பந்துவீச்சாளர் வீசிய பந்தை எதிர்கொள்ள ஃப்ரண்ட் ஃபூட் எடுத்து வைத்து அட முயன்றபோது ஸ்டம்பில் பொறுத்தப்பட்டு இருந்த கேமரா அவர் அணிந்திருந்த கிரிக்கெட் சூவின் கீழ்பகுதியில் ஒட்டி இருந்த போர்க் வகை கரண்டியை அழகாக படம் எடுத்தது. சிறிது நேரத்தில் மாலிக் காலுக்கு அடியில் ஏதோ ஒட்டி இருப்பதை உணர்ந்து அதை எடுத்துவிட்டார். இதனால் மைதானத்தில் சிரிப்பலை எழுந்தது. பலரும் அந்த வீடியோவையும், புகைப்படத்தையும் பகிர்ந்து நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.



ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த போட்டியில் சொயிப் மாலிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 12 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 ரன்களை சேர்த்த நிலையில் டோமினிக் ட்ரேக்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதே போல் மாலிக்கின் கயானா அணியின் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


உலகின் முன்னணி வீரராகவும் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஒருகாலத்தில் திகழ்ந்த சொயிப் மாலிக் 2021 கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக நடைபெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 12 பந்துகளை எதிர்கொண்ட மாலிக் 2 ரன்களை மட்டுமே எடுத்து இசுரு உடானா பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.


கரீபியன் ப்ரீமியர் லீக்கில் இதற்கு முந்தைய தொடர்களில் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களையே மாலிக் வெளிப்படுத்தி வந்துள்ளார். 58 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 1,686 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 37.46 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 120 எனவும் உள்ளது. சொயிப் மாலிக் விளையாடி வரும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் மாலிக் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் அது கயானா அணியை புள்ளிப்பட்டியலில் முன்னேற்ற உதவும்.