கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதையடுத்து, செல்ஃபோன் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததோடு, அது 2021ஆம் ஆண்டு முழுவதும் நீடித்துள்ளது.


App Annie என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டு இந்தியர்கள் தங்கள் சொல்ஃபோனில் சுமார் 699 பில்லியன் மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 3.8 ட்ரில்லியன் மணி நேரங்களை மக்கள் செல்ஃபோனில் செலவிட்டுள்ளோம். உலகளவில் இந்தப் பட்டியலில் முதலிடத்தைச் சீனாவும், இரண்டாம் இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன. 


App Annie வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனாவில் கடந்த 2020ஆம் ஆண்டையும், 2021ஆம் ஆண்டையும் ஒப்பிடுகையில் செல்ஃபோன் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், 2020ஆம் ஆண்டு இந்தியர்கள் சுமார் 655 பில்லியன் மணி நேரங்களைத் தங்கள் செல்ஃபோனில் செலவிட்டுள்ளனர்; அதற்கு முந்தைய ஆண்டு சுமார் 510 பில்லியன் மணி நேரங்களையும் செலவிட்டுள்ளனர். உலகிலேயே ஸ்மார்ட்ஃபோன்கள் அதிகளவில் விற்கப்படும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருப்பதோடு, இங்கு இணைய வசதிக்கான கட்டணம் மிகக் குறைவாக இருப்பதால் இந்தியாவில் அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பொழுதுபோக்கு, தொலைதொடர்பு, கேம்ஸ், பொருளாதாரம் முதலான பல்வேறு பணிகளுக்காக செல்ஃபோன் பயன்பாடு அதிகளவில் இருக்க்கிறது. 



செயலிகளைப் பதிவிறக்குவதிலும் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, கூகுள் ப்ளே ஸ்டோரில் சுமார் 26.7 பில்லியன் செயலிகள் இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் 2021ஆம் ஆண்டு மட்டுமே சுமார் 98.4 பில்லியன் செயலிகள் பதிவிறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பதிவிறக்கத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


பொருளாதாரம் சார்ந்த செயலிகள் இந்தியாவில் சுமார் 1 பில்லியன் முறை பதிவிறக்கப்பட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு வெறும் 8.9 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் வேலை தேடுவதற்கான செயலிகளும் இந்தியாவில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 


மேலும், 2021ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகளவில் பதிவிறக்கப்பட்ட செயலியாக `இன்ஸ்டாகிராம்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மக்கள் பணம் செலவு செய்த செயலி ஹாட்ஸ்டார் எனவும், அதிகளவில் மக்கள் தொடர்ந்து பயன்படுத்திய செயலியாக வாட்சாப் செயலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 



செயலிகளை உருவாக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் , லாபம் ஈட்டுவதற்கும் 2021ஆம் ஆண்டு ஆரோக்கியமானதாக இருந்துள்ளதாக App Annie அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ஐ. ஓ.எஸ், ஆண்ட்ராய்ட் ஆகிய ஆபரேடிங் சிஸ்டங்களுக்காக மொத்தமாக சுமார் 2 மில்லியன் புதிய செயலிகளும், கேம்ஸ்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் கூகுள் ப்ளே ஸ்டோரில் சுமார் 77 சதவிகித செயலிகளும், கேம்ஸ்களும் வெளியாகியுள்ளன.