கோவாக்ஸின் தடுப்பு மருந்து இரண்டாம் தவணை செலுத்தி சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது தவணையாக செலுத்தப்படும் பூஸ்டர் ஊசி உடலில் நோய் எதிர்ப்பை ஊக்குவிப்பதாகவும், தீவிர நோயில் இருந்து நீண்ட கால பாதுகாப்பை உறுதிசெய்வதாகவும், பாரத் பயோடெக் நிறுவனமும், பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனமும் கண்டுபிடித்துள்ளன.
BBV152 என்று அழைக்கப்படும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 90 சதவிகித நபர்களின் உடல்களில் நோய் எதிர்ப்புக்கான திறன் அதிகரிக்கப்படுவதாகவும், இது கோவிட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்துக் கொண்டவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபர்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் மிக சாதாரணமானவை எனவும், பெரிய வித பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளது இந்த ஆய்வு.
இந்த ஆய்வாளர்களைப் பொருத்த வரையில், இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, அது ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் முதலான அனைத்து வகை கொரோனா திரிபு வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பைப் பெருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பிறகும், இது நிகழ்ந்தாலும், அதன் கால அளவு குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தியவுடன் கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு செல்கள் சுமார் 19 முதல் 97 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`பூஸ்டர் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. மேலும் தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பை உறுதி செய்ய இவை தேவைப்படும்’ என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
`இந்தப் பரிசோதனை முடிவுகளில் கோவாக்ஸினை பூஸ்டர் தடுப்பூசியாக அறிமுகப்படுத்தும் எங்கள் நோக்கத்திற்கான முதல் படிக்கல் முன்வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக சர்வதேச மருந்து ஒன்றை உருவாக்கும் எங்கள் குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளன. பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் செலுத்தப்படும் கோவாக்ஸின் தடுப்பூசி தற்போது முன்னணியில் இரண்டு தவணை தடுப்பூசிகளாகவும், அடுத்து பூஸ்டர் தடுப்பூசிகளாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், கோவாக்ஸின் சர்வதேச தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது உறுதியாகிறது’ என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக் கட்டுரை இன்னும் பிற ஆய்வாளர்களால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆய்வுகள் கொரோனா இரண்டாவது அலையின் போது நடத்தப்பட்டுள்ளன.