மொபைல் போன் வாங்கவே காசு இல்லை என்று இருந்த நிலைமை மாறி இப்போது மொபைல் போனே இல்லாத ஆள் இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரிடமுமே மொபைல் போன் உள்ளது. அதுவும் ஸ்மார்ட்போன். குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் அவற்றை எளிதாக வாங்கிவிடுகின்றனர். அதேபோல, ஸ்மார்ட்போன்களை ஈஎம்ஐ போன்ற வசதியின் கீழ் வாங்கமுடிவதால் அனைவருமே வாங்கக்கூடிய ஒரு சராசரியான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. சொந்த ஊரில் நடக்கும் சம்பவங்கள் முதல் வெளிநாட்டில் நடக்கும் பிரச்சினைகள் வரை அனைத்து விஷயங்களையுமே ஸ்மார்போன் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது. வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல், பல்வேறு மொபைல் ஆப்கள், கேம்கள் என நம்மை ஸ்மார்ட்போனிலேயே கட்டிப் போட்டு வைத்துள்ளன.



இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. டெலாய்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில்கூட ஸ்மார்ட்போன் பயன்பாடு இருக்கும் என்று இந்த ஆய்வில் வாயிலாகத் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் (2021) இந்தியாவில் மொபைல் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 1.2 பில்லியனாக உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மட்டும் 750 மில்லியன் என்று தெரிய வந்துள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், மொபைல் பயன்பாடு, கிராமப்புற பகுதிகளில்தான் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கூற்றுப்படி, 2026ல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் வளர்ச்சி கிராமப்புற பகுதிகளில் 6 சதவிகிதம் உயரும் என்றும், நகர்ப்புற பகுதிகளில் 2.5 சதவிகிதம் உயரும் என்றும் கூறுகிறது. அப்படி கூடுமேயானால், 100 கோடி பேர் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்.



ஸ்மார்ட்போனுக்கான தேவையும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது இந்த அறிக்கை. 2021ல் 300 மில்லியனாக இருந்த டிமாண்ட் எண்ணிக்கை, 2026 - இல் 400 மில்லியனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், 5ஜி ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 5ஜி பயன்பாட்டின் வேகம், மற்றும் 5ஜி ஆனது இருந்த இடத்திற்கே மருத்துவத்தை கொண்டு வருதல் போன்ற வசதிகளை மேம்படுத்துவதால், இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டும் என்று கணிக்கப்படுகிறது. இணையப் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், தற்போது 80 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.2 பில்லியனாக உயரும் எனவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.